பிளாஸ்டிக் என்ற அசுரனை பற்றி தெரியுமா..
இந்தியாவில் ஒரு பொருள் தரமானதாக இருக்கிறதா இல்லையா என்பதை அங்கீகரிக்கும் அமைப்பாக BISதிகழ்கிறது.அந்த அமைப்பின் அதிகாரிகளில் ஒருவரான பிரமோத் குமார் திவாரி அண்மையில் பகீர் கருத்தை வெளியிட்டுள்ளார். அதாவது 100 விழுக்காடு மக்கும் பிளாஸ்டிக் என்று எவரேனும் விளம்பரம் செய்தால் அது பொய் என்று அவர் கூறியுள்ளார். ஏனெனில் பிளாஸ்டிக்கை 100 விழுக்காடு முழுமையாக மக்க வைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 100 விழுக்காடு முழுமையாக மக்கும் தன்மை பிளாஸ்டிக்குக்கு உள்ளதா இல்லையா என்பது குறித்து இன்னும் இந்தியாவில் நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டி இருப்பதாக கூறியுள்ள அந்த ஸ்ட்ரிக்ட் அதிகாரி, இந்த பிளாஸ்டிக் பொருள் முழுமையாக மக்கி விடும் என்று எவரேனும் விளம்பரம் செய்தால் அதற்கு அனுமதி தரக்கூடாது என்று சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கும் அறிவுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார். மற்றொரு கேள்விக்கு பதில் அளித்துள்ள அந்த அதிகாரி சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத பிளாஸ்டிக் பொருள் என விற்பது இன்னும் அதிக பிரச்னைகளை கொண்டுவரும் என்றும், பிளாஸ்டிக் பைகளுக்கு மேல் பூசப்படும் பச்சை நிறம் இன்னும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார். இன்னும் எந்தெந்த துறைகளில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்கள் உள்ளனவோ அவற்றை கண்டறியும் வேலையில் பிஐஎஸ் ஈடுபட்டுள்ளது. இதுவரை 22ஆயிரம் பொருட்களின் தரம் குறித்து ஆராயப்பட்டுள்ளதாகவும் திவாரி கூறியுள்ளார்.