பிரதமரின் பயணத்துக்கு எவ்வளவு செலவு தெரியுமா?
உலகளவில் இந்தியாவிற்கு என ஒரு அடையாளத்தை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார் என்றால் மிகையல்ல..அதாவது இந்தியாவின் முகமாக அவர் பல நாடுகளுக்கு பறந்து வருகிறார். இந்த நிலையில் அவர் வெளிநாட்டு பயணங்களுக்கு எவ்வளவு செலவானது என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இது நாடாளுமன்றத்திலும் முன் வைக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது. அண்மையில் நடந்த ஜி20 மாநாட்டுக்கு பிரதமர் மோடி இந்தோனேசியா சென்றுவந்ததற்கு மட்டும் 32 லட்சத்து 9 ஆயிரத்து 760 ரூபாய் செலவானதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த செப்டம்பரில் ஜப்பான் சென்ற பிரதமருக்கு மட்டும் 23 லட்சத்து 86ஆயிரத்து 536 ரூபாய் செலவாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு ஐரோப்பாவுக்கு மோடி சென்றதற்கு 2 கோடியே 15 லட்சத்து 61 ஆயிரத்து 304 ரூபாய் செலவாகி உள்ளதாகவும், 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றதற்கு மட்டும் பிரதமர் மோடிக்கு 23 கோடியே 27 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் செலவாகியுள்ளது. பிரதமர் மோடி இதுவரை மேற்கொண்ட 36 வெளிநாட்டு பயணங்களின் விவரங்களையும் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் பட்டியலிட்டுள்ளார். வெளிநாட்டு பயணங்களை பிரதமர் மேற்கொள்வது தேசத்தின் நலனுக்காகவே என்று கூறியுள்ள மத்திய அரசு, பருவநிலை மாற்றம்,பயங்கரவாத ஒழிப்பு,இணைய பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வளர்க்க பிரதமரின் வெளிநாட்டு பயணம் மிகவும் உதவும் என்றும் மாநிலங்களவையில் முன்வைக்கப்பட்டுள்ள புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.