என்ன நடந்தது தெரியுமா…?
பணவீக்கத்தை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் படாதபாடுபட்டு வருகின்றன. இதற்கு அமெரிக்கா ஒன்றும் விதிவிலக்கு அல்ல. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி புதிய உத்திகளை கையாண்டு வருகிறது. வங்கிகளுக்கு பெடரல் ரிசர்வ் தரும் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதன் விலைவாக விலைவாசி கட்டுப்பட்டு வருகிறது. இந்த சூழலில் அண்மையில் நடந்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் கூட்டத்தில் பேசிய முக்கிய முடிவுகள் குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது ஜூலை 25-26 ஆகிய தேதிகளில் நடந்த மத்திய நிதி கொள்கை கூட்டத்தில் இன்னும் வரும் நாட்களில் பெடரல் ரிசர்வ்வின் கடன்கள் உயர்த்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. பணவீக்கத்தின் அளவை 2%க்கும் குறைவாக குறைக்க இன்னும் எந்த அதீத முடிவுகளையும் எடுக்க பெடரல் ரிசர்வ் முடிவு செய்திருப்பதாகவும் விவாதிக்கப்பட்டது. 18 அதிகாரிகள் அடங்கிய இந்த குழுவில் கால் விழுக்காடு அளவுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தவும் பலரும் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது.அதாவது 18-இல் 11 பேர் தற்போதைய நிலையில் இல்லாமல் கூடுதலாக வட்டியை உயர்த்த இசைவு தெரிவித்துள்ளனர். இரண்டுபேர் இப்போதைய நிலையில் இருக்கவே வாக்களித்துள்ளனர். இன்னும் கால் விழுக்காடு அளவுக்கு கடன்விகிதத்தை உயர்த்திவிட்டால் 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட்டி விகிதம் உயர்ந்து விடும். 5.25%இல் இருந்து கடன் விகிதம் இனி 5.50%ஆக உயர்த்தப்பட இருக்கிறது. உலகளவில் நிகழும் நிலையற்ற சூழலை கருத்தில் கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் பெடரல் ரிசர்வ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பணவீக்க விகிதம் 2%க்கும் குறைவாக இருக்க போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க பெடரல் ரிசர்வ்வில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த தரவுகள் வெளியிடப்பட்டதும், அந்த நாளில் S&P500 என்ற அமெரிக்க பங்குச்நச்தை கடுமையாக வீழ்ந்தன, அதேசமயம் அமெரிக்க டாலரின் மதிப்பும் கணிசமாக ஏற்றம்பெற்றது.