அதானி பற்றி செபி என்ன சொல்லி இருக்கிறது தெரியுமா..???
அதானி குழுமத்தின் மீது கடந்த ஜனவரி 24ஆம் தேதி அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது. இதுபற்றி விசாரிக்க பல்வேறு தரப்பினரும் கோரி வழக்குகளும் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் சிறப்பு குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இப்படி விசாரணை நடத்தினால் முதலீட்டாளர்கள் நலன் பாதுகாக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதானி குழுமத்தின் மீதான விசாரணைக்குழுவில் செபி அதிகாரிகளும் இடம்பிடித்துள்ளனர். முதல்கட்ட விசாரணையின் அறிக்கை அண்மையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் புகாருக்கு பிறகு, அதானி குழுமத்தின் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை ஆட்டம் கண்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.சப்ரி,முன்னாள் செபி தலைவர் ஓபி பாட் உள்ளிட்ட பிரபலங்களை அடங்கிய குழுவும் தனியாக விசாரணை நடத்தி முதல்கட்ட அறிக்கையினை உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ளனர். அதில்,42 நிறுவனங்களின் பரிவர்த்தனைகளை ஆராய்ந்ததில் 13 வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றி விசாரிக்க கூடுதல் அவகாசம் தேவை என்றும் குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் விளக்கமான அறிக்கை தாக்கல் செய்யப்பட வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. நிபுணர் குழுவின் அறிக்கையால் அதானி குழுமத்தில் முதலீடு செய்தவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.