எதெல்லாம் விலை குறையும் தெரியுமா?
மத்திய பட்ஜெட்டில் சில பொருட்களுக்கு இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. இதே போல் சில பொருட்களுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இவை என்ன என்பதை தற்போது பார்க்கலாம். சிகரட்டுகளுக்கான சுங்க வரி 16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் இறக்குமதி சிகரெட் விலை உயரவுள்ளது. இதன் காரணமாக் பட்ஜெட் நாளில் ITC பங்குகள் விலை அதிகரித்தது. சமையலறையில் பயன்படுத்தப்படும் சிமினிகளுக்கான சுங்க வரி 7 புள்ளி 5 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சிம்னிகளின் விலை கடுமையாக அதிகரிக்கும். தொலைக்காட்சி பேனல்களுக்கான சுங்க வரி 5 சதவீதத்தில் இருந்து 2 புள்ளி 5 சதவீதமாக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தொலைக்காட்சிகளின் விலை குறைகிறது. கேமரா லென்ஸ் உதிரிபாகங்கள், எலக்ட்ரிக் வாகன பேட்டரிக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் – அயன் மூலப்பொருளுக்கு மேலும் ஓராண்டுக்கு வரி விலக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியை ஊக்குவிக்க இறால் உணவுகளுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி இறக்குமதிக்கும் கூடுதல் வரி விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை கூடத்தில் உற்பத்தி செய்யப்படும் வைரத்திற்கான வரியும் குறைக்கப்பட்டுள்ளது.மேலும், ரப்பருக்கான இறக்குமதி வரியும் 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில செல்போன் உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளதால் செல்போன்களின் விலையும் குறையவுள்ளது. இதே போன்று, வேளாண் மற்றும் ஜவுளி அல்லாத பிற பொருட்களின் இறக்குமதி சுங்கவரி 21 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், சைக்கிள், பொம்மைகள் உள்ளிட்டவற்றின் விலையும் குறைகிறது.