அறிக்கை என்ன சொல்லுது தெரியுமா?
தரமான சாலைகள் அமைப்பதை அரசின் பெருமையாக தற்போதைய மத்திய அரசு பிரசாரம் செய்து வருகிறது. ஆனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக சாலை போடும் திட்டங்களின் அளவு குறைந்துள்ளதாக புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. நோமுரா என்ற ஆராய்ச்சி நிறுவனம் ஆண்டுக்கு ஆண்டு மாநில அரசாங்கம்,மத்திய அரசாங்கம் எவ்வளவு நிதியை ஒதுக்கி எவ்வளவு தூரம் சாலை போடுகின்றனர் என்று புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சகம் 2023 நிதியாண்டில் 12,376 கிலோ மீட்டராக குறைந்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் 12,731 கிலோமீட்டர் ஆக இருந்தது. நடப்பாண்டு ஏப்ரலில் வெறும் 114 கிலோமீட்டர் சாலை அமைப்பதற்கான டென்டர்தான் வெளியிடப்பட்டுள்ளது. இது கடந்த 2020 நிதியாண்டை ஒப்பிடுகையில் 43 விழுக்காடு குறைவாகும். ஒவ்வொரு முறை பொதுத்தேர்தல்கள் வரும்போதும் சாலை திட்டங்கள் குறைவதாகவும் நோமுரா நிறுவனம் தெரிவிக்கிறது. ஒரு நாளைக்கு 37 கிலோமீட்டர் நெடுஞ்சாலை போடுவதாக 21 நிதியாண்டில் அரசாங்கம் தெரிவித்திருந்த நிலையில்,நடப்பு நிதியாண்டில் அது 30 கிலோமீட்டராக குறைந்துள்ளது. 2022-23 நிதியாண்டில் 10,993 கிலோமீட்டர் தூரம் சாலை மட்டுமே போடப்பட்டுள்ளது.ஆனால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதோ 12,500 கிலோமீட்டர். 24 நிதியாண்டில் தேர்தலை கருத்தில் கொண்டு அதிக தூரம் டெண்டர் விடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் அதற்குள் 9,000 முதல் 9500 கிலோமீட்டர் தூர சாலைகள் மட்டுமே அமைக்கவும் முடியும் என்று கூறப்படுகிறது. நிலம் கையகப்படுத்தல்,ஸ்டீல், சிமென்ட்,டீசல், தார் ஆகியவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதும் இந்த திட்டங்கள் குறைய காரணிகளாக கருதப்படுகின்றன. பாரத் மாலா திட்டத்துக்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின் நிஜமான செலவு கிட்டத்தட்ட இரண்டு மடங்காகவும் உயர்ந்துள்ளது. செலவினங்கள் அதிகரிப்பு,திட்டங்களின் செலவு அதிகரிப்பால் பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்கிறது நோமுரா அறிக்கை.