இந்தியாவின் மதிப்புமிக்க தனியார் கம்பெனி எது தெரியுமா..?
இந்தியாவின் மதிப்புமிக்க தனியார் கம்பெனி என்ற பட்டியலில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களுக்கு முதலிடம் கிடைத்திருக்கிறது. Hurun India’s 2022 Burgundy Private Hurun India 500 என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த பட்டியலில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் சொத்து மதிப்பு 16.4 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் டாடா கன்சல்டன்சி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு 11.8 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. இந்த பட்டியலில் 3ஆவது இடத்தில் HDFC வங்கி நிறுவனம் உள்ளது.இதன் சொத்து மதிப்பு 9 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் இந்தியாவின் அதிக வரி செலுத்தும் நிறுவனமாக ரிலையன்ஸ் நிறுவனம் திகழ்கிறது. ஓராண்டில் அதிகபட்சமாக 16,297 கோடி ரூபாய் அந்நிறுவனம் வரியாக செலுத்துகிறது. இதற்கு அடுத்தபடியாக பட்டியலிடப்படாத நிறுவனங்கள் பட்டியலில் சீரம் இந்தியா நிறுவனம் உள்ளது. 1 லட்சத்து 92 ஆயிரம் கோடி ரூபாயை இந்த நிறுவனம் வருவாயாக ஈட்டியுள்ளது. இந்த பட்டியல் என்பது கடந்த டிசம்பர் 30ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள டாப் 500 நிறுவனங்களின் மொத்த மதிப்பு 6.4 விழுக்காடு குறைந்துள்ளதாக புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது. பெரிய லாபத்தை பதிவு செய்யும் நிறுவனங்கள் பட்டியலில் எச்டிஎப்சி வங்கி நிறுவனத்துக்கு முதலிடம் கிடைத்திருக்கிறது. இதற்கு அடுத்த இடங்களில் ஐடிசி,எச்டிஎப்சி உள்ளன.அதானியின் 8 நிறுவனங்கள் தலா 52 விழுக்காடு அதாவது 10,25,955 கோடி ரூபாய் இழப்பை ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பிறகு இழந்திருப்பதாக பட்டியலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் ரிலையன்ஸ் குழுமத்தின் மதிப்பு 87,731 கோடி ரூபாய் சரிந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. ஆனால் டிசிஎஸ் நிறுவனத்தின் மதிப்பு 0.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஆனால் எச்டிஎப்சி வங்கி மட்டும் 12.9விழுக்காடு அதிக வளர்ச்சி கண்டுள்ளது.