ரகுராம் ராஜன் கவலை ஏன் தெரியுமா..
அமெரிக்காவில் வங்கிகள் திவாலாகி போனதால் அதனை சர்வசாதாரணமாக கடந்து நாம் செல்கிறோம் ஆனால் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன் இதுகுறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். அதில் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக வலம் வரும் அமெரிக்காவில் அடுத்தடுத்து 3 வங்கிகள் திவாலானது சாதாரண விஷயம் இல்லை என்று கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள ரகுராம்ராஜன்,அமெரிக்க அதிகாரிகள் வங்கி திவாலை அடுத்து அச்சத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். பிரச்சனையை தீர்க்க டெபாசிட்களுக்கு தற்காலிகமாக காப்பீடு தருவது தீர்வல்ல என்று கூறியுள்ள ரகுராம் ராஜன், உண்மையில் நிரந்தர பிரச்னை இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.அமெரிக்காவில் கடந்த 2 ஆண்டுகளில் காப்பீடு செய்யப்படாத ஏராளமான வங்கிப்பணம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். கணிசமாக அதிகரித்து வரும் பெடரல் ரிசர்வ்வின் வட்டி விகித உயர்வே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மிக வசதி படைத்த வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் முதலீடுகளை ஒரே நேரத்தில் அதிகமாக திரும்ப எடுத்ததே காரணம் என்றும் ரகுராம் ராஜன் விளக்குகிறார். என்ன பிரச்சனை என்று மக்களிடம் சொல்லாமல், பிரச்சனை இருக்கிறது தாங்கிக்கொள்ளுங்கள் என்று மட்டுமே அமெரிக்க அரசு கூறுவதாகவும் அவர் சாடியுள்ளார். மிகப்பெரிய டைம் பாம் போல அமெரிக்க ரியல் எஸ்டேட் துறை வீழ்ச்சி இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார். பழைய சொத்துகளை அமெரிக்காவில் விற்பது மிகப்பெரிய சிக்கலாக மாறும் என்றும் ரகுராம் ராஜன் கணித்து எச்சரிக்கிறார்.