ஏன் 5 நாளும் ஆஃபீசுக்கு வரணும் தெரியுமா?….
இந்தியாவின் மிகப்பெரிய டெக் நிறுவனமாக டிசிஎஸ் நிறுவனம் திகழ்கிறது. இந்த நிறுவனத்தில் கொரோனா காலகட்டத்தில் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற நிறுவனம் அறிவுறுத்தியது. தற்போது கொரோனா காலகட்டம் முடிந்துவிட்டதால் படிப்படியாக பணியாளர்களை மீண்டும் அலுவலகத்துக்கு வரவைத்துள்ளது. இது பற்றி அந்நிறுவனத்தின் மனிதவளப்பிரிவு தலைவர் மிலிந்த் லக்கார்ட் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் கொரோனா காலகட்டத்துக்கு முன்பு இருந்த நிலையில் பணியாளர்கள் மீண்டும் அலுவலகத்துக்கு வரவேண்டும் என்று விரும்புவதாக கூறியுள்ளார். கொரோனா நாட்களில் ஏராளமானோர் பணியில் சேர்ந்துள்ள நிலையில் அவர்கள் வீட்டில் இருந்தும், கலவையான பாணியிலும் வேலை பார்த்துள்ளனர். அவர்களை மீண்டும் அலுவலகத்துக்கு வரவைத்தால்தான் அலுவலக சூழல் எப்படி இருக்கிறது. டிசிஎஸ்ஸில் எப்படி பணியாற்றுகிறார்கள் என்ற சூழல் தெரியவரும் என்றும் கூறியுள்ளார். வீட்டில் இருந்து பணியாற்றுவது பணியாளர்களுக்கு சவுகர்யமாக இருந்தாலும் அது நிர்வாகத்துக்கு சிக்கலான கட்டமைப்பாக மாறியதாக கூறினார். 70 விழுக்காடு பணியாளர்கள் அலுவலகத்துக்கு வந்து பணியாற்றத் தொடங்கியிருப்பதாக கூறியுள்ள தலைமை செயல் அதிகாரி சுப்பிரமணியம்,இதனால் நிறுவனத்துக்கு ஏகப்பட்ட நண்மைகள் கிடைத்திருக்கிறது என்றார். முன்னாள் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் , 2025 வரை டிசிஎஸ் நிறுவன ஊழியர்கள் சுழற்சி அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் புதிய நிர்வாகிகள் அந்த முறையை கடுமையாக எதிர்க்கின்றனர். தங்கள் நிறுவன பணியாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் எது ஒத்துவருமோ அதைத்தான் நிறுவனம் செய்யும் என்றும் லக்கார்ட் கூறியுள்ளார்.