சொமோட்டோவுல ஆர்டர் போட்றீங்களா..???
மீனவனும்,விவசாயியும் எப்படி உற்பத்தி செய்தும் லாபம் அடையாமல், நடுவில் இருக்கும் தரகர்கள் லாபம் பார்க்கிறார்களோ அதேதான் தற்போது உணவு டெலிவரி நிறுவனங்களின் செல்வாக்கான நிலையும். யாரோ உணவு தயாரிக்கிறார், யாரோ உணவை வாங்குகிறார் ஆனால் நடுவில் இருக்கும் டெலிவரி நிறுவனத்துக்கு இனி 2 ரூபாய் நீங்கள் தரவேண்டும்.
இந்த நிலை உண்மைதான் அண்மையில் சொமேட்டோவில் தள கட்டணம் அதாவது பிளாட்ஃபார் பீஸ் என்று ஒரு ஆர்டருக்கு 2 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இது ஏன் என்றால் குறிப்பிட்ட நிறுவனத்தை லாபகரமாக மாற்றவேண்டுமாம்,நிலையான வளர்ச்சி வேண்டும் என்பதற்காக இப்படி செய்யப்படுகிறது என்ற நூதன விளக்கமும் கிடைத்திருக்கிறது.
சொமேட்டோ நிறுவனம் தனது ஏப்ரல் -ஜூன் காலாண்டில் முதல் முறையாக 2 கோடி ரூபாய் லாபத்தை பார்த்துள்ளது. கடந்தாண்டை ஒப்பிடுகையில் 2597 கோடி ரூபாய் லாபத்தை அந்நிறுவனம் பெற்றுள்ளது. கொரோனாவுக்கு பிறகு சொமேட்டோ நிறுவனத்தின் வருவாய் கணிசமாக உயர்ந்திருக்கிறது. 1 கோடியே 75 லட்சம் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் சொமேட்டோவை பயன்படுத்தி வருகின்றனர். இந்த 2 ரூபாய் விவகாரம் குறித்து சொமேட்டோவின் தலைமை செயல் அதிகாரியான தீபிந்தர் கோயல் பங்குதாரர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தாங்கள் எடுத்த ரிஸ்க் நல்ல பலனை விரைவாக தந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். சொமேட்டோவின் போட்டி நிறுவனமான ஸ்விக்கியும் இந்தாண்டு தொடக்கத்திலேயே இதே மாதிரியான கட்டணத்தை அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை சொமேட்டோவில் மட்டுமே இந்த கட்டணம் வசூலிக்கப்படுதாகவும், பிளிங்கிட்டில் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.