வீழ்வேன் என நினைத்தாயோ…வோடபோன் ஐடியா மைண்ட்வாய்ஸ்..!!!
பெரிய கடன், எல்லா பக்கமும் இருந்து அழுத்தம்,இத்தகைய சூழலில் வேறு எந்த நிறுவனமாக இருந்தால் ஓடிவிட்டு இருப்பார்கள் ஆனால் அத்தனையும் சமாளித்து வருகிறது வோடபோன் ஐடியா நிறுவனம். இப்படித்தான் பில்டப் தர வேண்டியிருக்கிறது இந்த நிறுவனத்துக்கு. ஆமாம், கடந்த ஓராண்டாக 10 ரூபாயை கூட தொடாமல் இருந்த வோடபோன் ஐடியா நிறுவன பங்குகள் தற்போது 10 ரூபாயை கடந்திருக்கிறது. இது கடந்த 17மாதங்களில் மிக அதிகளவாகும். தொடர்ந்து 5 மாதங்களாக இந்நிறுவனம் பாசிடிவ் பக்கம் திரும்பி வருகிறது. கடந்த 2012 செப்டம்பர்-டிசம்பர் மற்றும் 2013 ஜனவரி-பிப்ரவரி காலகட்டத்தை இந்தநிறுவனம் நினைவுபடுத்துகிறது. கடந்த 9 வர்த்தக நேரங்களில் 7 சமையங்களில் இந்நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. இந்தாண்டு மார்ச் மாதம் இருப்பதிலேயே குறைவாக 5ரூபாய் 70 காசுகளுக்கு சென்ற வோடபோன் நிறுவன பங்குகள் தற்போது கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளன. சேவை வழங்கி வரும் நிறுவனங்களுக்கு தரவேண்டிய பணத்துக்கு போதுமான அளவு அவகாசம் கிடைத்ததை அடுத்து வோடஃபோன் நிறுவனம் கவனம் பெற்றுள்ளது.வெளிநாடுகளில் இருந்து வோடபோன் ஐடியா நிறுவனத்துக்கு முதலீடுகள் குவியத் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பாவில் இந்த நிறுவனபங்குகளை முதலீட்டாளர்கள் அதிகம் வாங்குகின்றனர். கடந்த 2 மாதங்களாக நிதி திரட்டும் நடவடிக்கையில் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடனில் சிக்கித்தவித்து வரும் வோடஃபோன் நிறுவனம் புரோமோட்டர்களின் உதவியுடன் 2,000 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டது. ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் கடன் மட்டும் 7ஆயிரத்து 840 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தக நேர முடிவில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 11விழுக்காடு வரை ஏற்றம் பெற்று 10 ரூபாய் 5 பைசாவாக உயர்ந்திருக்கிறது.