பண மோசடி வழக்கில் சிக்கிய சரவணா கோல்டு பேலஸ்
சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் 234 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு தொழில் பயன்பாட்டிற்காக, இந்தியன் வங்கியில், சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவன உரிமையாளர்கள் 150 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். அதே ஆண்டில் மேலும் 90 கோடி ரூபாய் கூடுதல் கடனாக பெறப்பட்டு உள்ளது.
இந்நிலையில், முதலில் வாங்கிய கடன் தொடர்பான சொத்துக்களை வங்கிக்கு தெரியாமல் மாற்றியதாகவும், இரண்டாவதாக பெறப்பட்ட 90 கோடி ரூபாய் கடனை கொண்டு, முதலில் வாங்கிய 150 கோடியில் பாதியை அடைக்க முயற்சி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாகி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டில், வங்கியில் கடன் பெறுவதற்காக கூறப்பட்ட காரணங்களுக்காக பணத்தை பயன்படுத்தாமல், முறைகேடாக முதலீடு செய்ததுடன் பல்வேறு விதிமுறைகளை மீறியதும் தெரியவந்து உள்ளதாக புகாரில் கூறப்பட்டிருந்தது. மேலும், வங்கியில் இருந்து பெறப்பட்ட கடனை கொண்டு, வேண்டுமென்றே இது போன்ற மோசடி செயல்களில் ஈடுபட்டு, வங்கி நிர்வாகத்திற்கு நஷ்டம் எற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வங்கி மோசடி விவகாரத்தில் சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் மீது கடந்த மே மாதம் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
இந்நிலையில், இந்த புகாரில், மேலும் 234.75 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.