பிளிப்கார்ட்டிற்கு ₹10,000 கோடி அபராதம் விதித்த அமலாக்கத்துறை – என்ன நடந்தது?
வெளிநாட்டு முதலீட்டு சட்டங்களை (foreign investment laws) மீறியதற்காக வால்மார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான பிலிப்கார்டுக்கு ஏன் $1.35 பில்லியன் (சுமார் ₹10,000 கோடி) அபராதம் விதிக்கக்கூடாது என்று அமலாக்கத்துறை (Enforcement Directorate) கேள்வி எழுப்பியுள்ளது.
மல்டி-பிராண்ட் சில்லறை விற்பனையை கறாராக ஒழுங்குபடுத்தவும், விற்பனையாளர்களுக்கான சந்தையை இயக்குவதற்குமான அத்தகைய நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் வெளிநாட்டு முதலீட்டு சட்டங்களை மீறியதாகக் குற்றம் சாட்டி, அமலாக்க துறையானது பல ஆண்டுகளாக இ-காமர்ஸ் ஜாம்பவான்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களை விசாரித்து வருகிறது.
அமலாக்கத்துறை அதிகாரி கூறுகையில், பிளிப்கார்ட் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தது தொடர்புடைய WS Retail பிளிப்கார்ட்டின் ஷாப்பிங் இணையதளத்தில் மக்களுக்கு பொருட்களை விற்றது – இது இந்திய சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டது.
ஜூலை மாத தொடக்கத்தில், சென்னையில் உள்ள ED அலுவலகம், பிளிப்கார்ட், அதன் நிறுவனர்களான சச்சின் பன்சால், பின்னி பன்சால் மற்றும் தற்போதைய முதலீட்டாளர் டைகர் குளோபல் ஆகியோருக்கு $1.35 பில்லியன்) அபராதம் ஏன் விதிக்கக்கூடாது என்பதை விளக்க “ஷோ காஸ்” நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது.
பிளிப்கார்ட் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில் “இந்திய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டே நாங்கள் இயங்குகிறோம்” என்றார். “அதிகாரிகளின் அறிவிப்பின் படி 2009-2015 காலகட்டத்தில் நிகழ்ந்த இந்தப் பிரச்சினையை சரி செய்ய , நாங்கள் அவர்களுடன் ஒத்துழைப்போம்” என்று மேலும் அவர் கூறினார்.
விசாரணையின் போது நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட இத்தகைய அறிவிப்புகளை ED விளம்பரப்படுத்தாது. பிளிப்கார்ட்டுக்கு பதிலளிக்க சுமார் 90 நாட்கள் உள்ளன. WS Retail தனது விற்பனையை 2015 ஆம் ஆண்டு இறுதியில் நிறுத்திக் கொண்டது
வால்மார்ட் 2018 ஆம் ஆண்டில் ஃப்ளிப்கார்ட்டில் பெரும்பான்மையான பங்குகளை 16 பில்லியன் டாலருக்கு வாங்கியது. சச்சின் பன்சால் அந்த நேரத்தில் வால்மார்ட்டுக்கு தனது பங்குகளை விற்றார், பின்னி பன்சால் ஒரு சிறிய பங்கை தன்னிடம் வைத்திருந்தார்.
ஃபிளிப்கார்ட்டின் மதிப்பீடு 3 வருடங்களுக்குள் 37.6 பில்லியன் டாலராக ஆகியது, அப்போது சாஃப்ட் பேங்க் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் மீண்டும் முதலீடு செய்தது.
அமலாக்கத்துறையின் இந்த அறிவிப்பு ஃபிளிப்கார்ட்டுக்குப் புதிய தலைவலியாக மாறி இருக்கிறது. அமேசான் ஏற்கனவே இந்தியாவில் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் விசாரணைகளை எதிர்கொள்கிறது. மேலும் சிறிய விற்பனையாளர்களிடமிருந்து அமேசான் மீதான புகார்கள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவின் நேரடி சில்லறை விற்பனையாளர்கள் கூறுகையில், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தங்கள் தளங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனையாளர்களை விரும்புவதாகவும், வெளிநாட்டு முதலீட்டு சட்டங்களைத் தவிர்ப்பதற்காக சிக்கலான வணிக கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதாகவும், சிறிய வணிகர்களைக் காயப்படுத்துவதாகவும் கூறுகின்றனர். பெரிய நிறுவனங்கள் இதை மறுக்கின்றன.