“செயல்திறன்தான் புதிய பணம்..”
மெர்சீடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் சிஇஓவாக Ola Kaellenius என்பவர் இருக்கிறார். இவர் அண்மையில் புகழ்பெற்ற செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.அந்த பேட்டியில் மின்சார கார்களின் கட்டமைப்பு குறித்து பேசியுள்ளார். ஒவ்வொரு கிலோவாட் ஆற்றலுக்கும் தற்போதுள்ள ரேஞ்சைவிட கூடுதலாக 30-35 % அதிக தூரம் செல்லும் கார் பேட்டரிகள் மிகமுக்கியம் என்றார். லித்தியம் அயன் பாஸ்பேட் ஆகியவற்றின் கலவையாக புதிய சிஎல்ஏ ரக கார்களை மெர்சீடீஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இவை 2025ஆம் ஆண்டு சந்தைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். டெஸ்லா நிறுவனத்துக்கு போட்டியாக இந்த புதிய மின்சார கார்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.இது அமெரிக்கா மட்டுமின்றி சீன நிறுவனங்களுக்கும் போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெர்மனியில் நடக்கும் IAA ஆட்டோ கண்காட்சியில் புதிய CLA ரக கார்களை மெர்சிடீஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. Efficiency என்ற செயல்திறன்தான் புதிய பணம் என்று ஓலா குறிப்பிட்டுள்ளார். 100 கிலோமீட்டர் பயணிக்க 12 கிலோவாட் ஆற்றல் தேவைப்படும் என்றும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 750 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் வகையில் புதிய கார் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. டெஸ்லாவின் மாடல் 3 ரக கார்கள் 100கிலோமீட்டருக்கு 13.1 கிலோவாட் தேவைப்படுகிறது. குறைவான சார்ஜில் எந்த கார் அதிக தூரம் பயணிக்குமோ அதுதான் மக்களின் தேர்வாக இருக்கும் என்றும் ஓலா குறிப்பிட்டார். விஷன் EQxxஎன்ற திட்டத்தில் மெர்சிடீஸ் நிறுவன பொறியாளர்கள் குறைவான சார்ஜில் அதிக தூரம் பயணிக்கும் கார்களை தயாரிக்க பரிசோதனைகளை செய்து வருகின்றனர்.100 கிலோமீட்டர் பயணம் செய்ய 8.3 கிலோவாட் போதுமென்ற புதிய இலக்கை எட்ட இருப்பதாக Ola Kaellenius தெரிவித்துள்ளார்.