பெட்ரோல், டீசலில் அரசுக்கு 8 லட்சம் கோடி வருமானம் !
கடந்த மூன்று நிதியாண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி மூலம் மத்திய அரசு கிட்டத்தட்ட ரூ. 8.02 லட்சம் கோடி சம்பாதித்துள்ளது என்றும் இதில் 2021ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.3.71 லட்சம் கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சென்ற 3 ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி உயர்வு மற்றும் இந்த எரிபொருட்கள் மீதான பல்வேறு வரிகள் மூலம் ஈட்டிய வருவாய் விவரங்கள் குறித்த கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசலில் இருந்து வசூலிக்கப்பட்ட செஸ்கள் உட்பட மத்திய கலால் வரிகள்: 2018-19ல் ரூ.2,10,282 கோடி; 2019-20ல் ரூ.2,19,750 கோடியும், 2020-21ல் ரூ.3,71,908 கோடியும்,” என்று சீதாராமன் ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறினார்.
இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்னதாக நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை முறையே லிட்டருக்கு ரூ.5 மற்றும் ரூ.10 என அரசாங்கம் குறைத்தது. இதைத் தொடர்ந்து இரண்டு எரிபொருட்கள் மீதான மதிப்பு கூட்டு வரியை (வாட்) குறைப்பதாக பல மாநிலங்கள் அறிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது