இங்க வர சொன்னா ஐயா ஒரே பிசியாம்.அங்க மட்டும் போவாராம்…
டிவிட்டர், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் என மிகப்பெரிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க். இவர் அண்மையில் இந்தியா வருவதாக இருந்தது. கடந்த 21 ஆம் தேதி டெல்லி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முக்கிய பணிகளால் தாம் இந்தியாவுக்கு வர முடியவில்லை என்று அறிவித்தார். இந்நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென அவர் சீனாவுக்கு சென்று அந்நாட்டு பிரதமரை சந்தித்தார். முழுமையான தானியங்கி கார்கள் குறித்து விவாதிப்பதற்காக மஸ்க் சீனா சென்றதாக கூறப்படுகிறது. தனது டெஸ்லா நிறுவன கார்கள் தானாகவே இயங்கும் திறமை குறித்த மென்பொருளுக்கு ஒப்புதல் பெற இந்த திடீர் பயணத்தை அவர் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. 2021 முதல் ஷாங்காயின் அனைத்துத் தரவுகளையும் சேகரித்துள்ள டெஸ்லா நிறுவனம் அவற்றில் எதையும் சீனாவைவிட்டு வெளியிலோ, அமெரிக்காவுக்கோ அனுப்பவில்லை. தானியங்கி கார்களுக்கான புதிய மென்பொருளான FSD மென்பொருள் உடனடியாக சீனாவுக்கு கிடைக்கும் என்று அந்நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் மஸ்கின் திடீர் பயணம் கவனம் பெற்றுள்ளது. அண்மையில் ஆட்குறைப்பு குறித்து டெஸ்லா நிறுவனம் அறிவித்திருந்த அதே நேரம் பீய்ஜிங்குக்கு மஸ்க் சென்றுள்ளார். கடந்தாண்டும் தனக்கு சொந்தமான ஜெட் விமானம் மூலம் மஸ்க் சீனா சென்றார். சீனாவில் மட்டும் டெஸ்லா நிறுவனம் தனது 17 லட்சம் கார்களை சீனாவில் விற்றுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய டெஸ்லா ஆலை ஷாங்காயில்தான் இருக்கிறது என்பதும் முக்கிய அம்சமாகும்.
மே 4 ஆம் தேதி சீனாவில் கார் கண்காட்சி நடைபெற இருக்கும் நிலையில் திடீரென மஸ்க் அங்கு சென்றுள்ளார். சீனாவின் சிக்கலான சாலைகள் தங்கள் நிறுவனத்தின் பயிற்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று டெஸ்லா நிறுவனம் கூறியுள்ளது.
அண்மையில் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் மிகவும் சரிந்து காணப்பட்ட நிலையில் ஆட்குறைப்பை மஸ்க் அறிவித்திருந்தார். கடந்த 2020-ஆம் ஆண்டில் கொரோனா காலகட்டத்துக்கு பிறகு டெஸ்லா நிறுவனத்தின் உற்பத்தி வெகுவாக குறைந்துவிட்டது.