எலான் மஸ்கின் அடுத்த அதிரடி!!!…
டிவிட்டர் நிறுவனத்தை வாங்கி அதை எக்ஸ் என்று பெயர் மாற்றிய பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், விரைவில் எல்லா டிவிட்டர் பயனர்களும் பணம் செலுத்தநேரிடும் என்று தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அதிபர் பென்ஜமின் நெதன்யாகுவை நேரில் சந்தித்த எலான் மஸ்க் பல்வேறு தரப்பு தலைப்புகள் குறித்தும் ஆலோசித்தார். அப்போது பேசிய எலான் மஸ்க், டிவிட்டர் அதாவது எக்ஸ் தளத்தை மொத்தம் மாதந்தோறும் 55 கோடி பேர் பயன்படுத்தி வருவதாகவும்,ஒரு நாளைக்கு 20 கோடி பதிவுகள் செய்யப்படுவதாகவும் கூறினார். மேலும் எக்ஸ் தளத்தில் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவகையில் பாட் எனப்படும் போலி கணக்குகள் இருப்பதாக கூறினார். இதை குறைக்க அடிப்படையாக ஒரு தொகை வசூலிப்பதே சரியான செயலாக இருக்கும் என்றும் கூறினார்.மஸ்க் டிவிட்டரை வாங்குவதற்கு முன்பு 23 கோடியே 80 லட்சம் பேர் டிவிட்டரை பயன்படுத்தி வந்தனர்.ஏற்கனவே விளம்பர வருமானம் சரிந்தது மற்றும் டிவிட்டரின் ஏகப்பட்ட கடன்களால் தவிக்கும் மஸ்க், எப்படியாவது நிறுவனத்தை மாற்ற கடுமையாக போராடி வருகிறார். ஏற்கனவே எக்ஸ் பிரீமியம் சேவைகளுக்கு சந்தா வசூலித்து வரும் மஸ்க்,விரைவில் சந்தாவை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சந்தாவாக இந்தியாவில் ஒரு மாதத்துக்கு 900 ரூபாய் வரை வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.