ஜெட் ஏர்வேஸுக்கு பை பை சொன்ன ஊழியர்கள்!!!
எப்போது ஒரு நிறுவனம் சரிவை சந்திக்கிறதோ அப்போதே அதில் பணியாற்றும் ஊழியர்கள் வேறு வேலைகளை தேடிக்கொள்வது சிறந்த உத்தியாகும். ஆனால் வருங்காலம் இருக்குமா இருக்காதா என்று கணிக்க முடியாத இடத்தில் இருக்கும் நிறுவன ஊழியர்களின் நிலைதான் சற்று கவலைக்கிடம்.ஜெட் ஏர்வேசின் நிலையும் தற்போது அப்படித்தான் உள்ளது. ஜெட் ஏர்வேசின் மூத்த ஊழியர்கள், பைலட்டுகள் மற்றும் கேபின் க்ரூவில் பணியாற்றுவோர் என ஒரு பெரிய படையே தற்போது வெளியேறியுள்ளது. மலை போல குவிந்துகிடக்கும் கடன், அரசின் விதிகளுக்கு உட்பட்டு சோதனை ஆகியவற்றை சமாளித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானங்களை இயக்குவது என்பது கேள்விக்குறியான ஒன்றாக உள்ளது. எப்போது வேண்டுமானாலும் மீண்டும் பறந்து விமான சேவைகளை தொடங்க இருந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு அதன் மூத்த பணியாளர்கள் வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெட் ஏர்வேசுக்கு கடன் கொடுத்த நிறுவனங்கள் ஒரு பக்கம் தொட்ர்ந்து பணம் கேட்டபோதும், சிக்கன நடவடிக்கையை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கையாண்டது. ஜெட் ஏர்வேசின் பணியாளர்களுக்கு சம்பளம் குறைப்பு, சில பணியாளர்களுக்கு சம்பளமே இல்லாமல் விடுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் பெரிய பலனை தரவில்லை.ஜெட் நிறுவனத்திற்கு பாதிப்பை தரும் வகையில் இருந்த அத்தனை பிரச்னையும் தற்போது ஓயப்போவது இல்லை என்று தெரிந்த மூத்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மூத்த பொறியாளர்கள், மனிதவளத்துறை ஆகியவற்றில் திறமை பெற்ற இளைஞர்கள் வெளியேறியது அந்நிறுவனத்துக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.