ரூ.6லட்சம் கோடி இழப்பு..
இந்திய பங்குச்சந்தைகளில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட கடும் சரிவு காரணமாக முதலீட்டாளர்களுக்கு 6லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் சூழல், உலகளாவிய பங்குச்சந்தைகளில் சரிவு காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 155 புள்ளிகள் குறைந்து, 80ஆயிரத்து641 புள்ளிகளாகவும்,தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 82 புள்ளிகள் சரிந்து 24 ஆயிரத்து 379 புள்ளிகளாகவும் வணிகம் நிறைவுற்றது. Hero MotoCorp, Tata Steel, Bharti Airtel, M&M, HUL உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்தை கண்டன. Adani Enterprises, Eternal, Trent, SBI Life உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டமடைந்தன. ஆட்டோமொபைல் துறையைத் தவிர்த்து மற்ற அனைத்து துறை பங்குகளும் சரிவை கண்டன. பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் 5 விழுக்காடு வரை சரிந்தன. ரியல் எஸ்டேட் துறை பங்குகள் மூன்றரை விழுக்காடும், மருந்து, ஊடகத்துறை பங்குகள் இரண்டரை விழுக்காடு வரை சரிந்தன. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கடந்த வாரத்தில் சரிந்து வந்தது.
கடந்த சனிக்கிழமை ஒரு சவரன் தங்கம் 70 ஆயிரத்து 40 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. திங்கட்கிழமை ஒரு சவரன் தங்கம் காலையில், 160 ரூபாயும், பிற்பகலில் சவரனுக்கு ஆயிரம் ரூபாயும் விலை உயர்ந்தது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலையில் மீண்டும் சவரனுக்கு ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்த தங்கம், பிற்பகலில் சவரனுக்கு 600 ரூபாய் விலை உயர்ந்து 72ஆயிரத்து 800 ரூபாயாக விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் 9 ஆயிரத்து 100 ரூபாய் என்ற விலையில் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் 111 ரூபாயாகவும், கட்டிவெள்ளி விலை கிலோ 1லட்சத்து 11 ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் ஒரு சவரன் 2 ஆயிரத்து 760 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டி 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரத்துடன் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்
