செலவுகள் அதிகரிக்கிறது-கண்காணிக்கும் ரிசர்வ் வங்கி..
கொரோனாவுக்கு பிறகு வீட்டுக்கடன்கள் தொடர்பான சுமைகள் இந்திய மக்களிடம் அதிகரித்துள்ளது. இதனால் வீடுகளில் சேமிப்புகள் குறைந்துகொண்டே வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அளவுக்கு கூட சேமிப்புகள் இல்லை என்ற அதிர்ச்சி தகவலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. 2013-22 காலகட்டத்தில் 20 விழுக்காடாக இருந்த சராசரி சேமிப்பு விகிதம் 2023 நிதியாண்டில் வெறும் 18.4 %ஆக சரிந்துள்ளதாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. இதேபோல் நிகர சேமிப்பு அளவு என்பது 2013-22 காலகட்டத்தில் 39.8%ஆக இருந்தது. இது தற்போது 28.5%ஆக சரிந்துள்ளது. நிதி செலவுகள் என்பது மிக மிக உயர்ந்து வருவதாகவும் ரிசர்வ் வங்கி கூறுகிறது. நிதி சமநிலை அறிக்கை என்ற பெயரில் ரிசர்வ் வங்கி இந்த தரவுகளை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் என்பது உள்நாட்டு உற்பத்தியில் 40 %ஆக இருக்கிறது. ரீட்டெயில் லோன் எனப்படும் கடன்கள் கொரோனாவுக்கு பிறகு அதிகரித்துள்ளது. கடன் வாங்கியவர்களில் 3-ல் 2 பங்கு மக்கள் தங்கள் சக்திக்கு மீறிய தொகையைத்தான் கடன்களாக வாங்கியிருப்பதாகவும் ரிசர்வ் வங்கி குறிப்பிடுகிறது. கொரோனா காலகட்டத்தில் சேமிப்புகள் அதிகரித்ததாக கூறிய இதே ரிசர்வ் வங்கி, தற்போது நேரெதிர் நிலை உள்ளதாக கூறியுள்ளது. வங்கி அல்லாத சந்தை மூலதனங்களில் மக்கள் அதிகம் முதலீடு செய்வதாகவும் ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.