கூடுதல் செலவாகும்..புலம்பும் நிறுவனங்கள்…
என்னதான் செல்போன்கள் வந்துவிட்டாலும் தொலைக்காட்சிகளை பார்க்கும் மோகம் இந்தியர்களுக்கு குறைந்தபாடில்லை.அதிலும் செல்போனிலேயே டிவி பார்ப்பது இந்தியர்களுக்கு பிடித்த மிகமுக்கிய விருப்பங்களில் ஒன்று.
தற்போது வரை ஓடிடி மற்றும் யூடியூப் வாயிலாகத்தான் மக்கள் தங்கள் விருப்பமான டிவிகளை செல்போன்களில் பார்த்து வருகின்றனர். இதற்கு மாற்றாக செல்போன்களில் நேரடியாக டிவி பார்க்கும் வசதிக்கு ATSC 3.0 என்ற நுட்பம் உதவுகிறது.
இதனை இந்தியாவில் வரும் போன்களில் களமிறக்க செல்போன் நிறுவனங்களுக்கு கோரிக்கை எழுந்துள்ளன. பிரச்சனை என்னவென்றால் இந்த நுட்பத்தை பார்க்க செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கூடுதலாக ஒரு செல்போனுக்கு 30 டாலர்கள் வரை செலவாகிறது. இதற்கு சாம்சங் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக தற்போது பல கோடி ரூபாய் முதலீடு செய்து உற்பத்தி செய்யப்பட்ட செல்போன்கள் வீணாகிவிடும் என்பது சாம்சங் நிறுவனத்தின் கருத்தாக இருக்கிறது. இதுமட்டுமின்றி செல்போன்களில் சிம்கார்ட் உதவியில்லாமல் தொலைக்காட்சிகளை பார்க்கும் வசதி அமலுக்கு வந்தால் செல்போன்களின் பேட்டரி திறன் பாதிக்கப்படும் என்று செல்போன் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக இந்திய தொலைதொடர்புத்துறைக்கு செல்போன் தயாரிப்பு நிறுவனங்களான சாம்சங், குவால்காம், உதிரி பாக உற்பத்தியாளரான எரிக்சன், நோக்கியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து கூட்டாக கடிதம் எழுதியிருக்கின்றன. தற்போது வரை தென்கொரியா மற்றும் அமெரிக்காவில் மட்டுமே இந்த வகை நுட்பம் செயல்பாட்டில் இருக்கின்றன. எனினும் இந்தியாவில் இந்த நுட்பம் அமலுக்கு வந்தால் அதற்கு உண்டான கட்டமைப்பு மேம்படுத்த வேண்டியிருக்கும் என்றும், இது சிம்கார்ட் நிறுவனங்களின் வருவாயை வெகுவாக பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. நேரடியாக செல்போனிலேயே டிவி பார்க்கும் வசதிக்கு ஆப்பிள், ஷாவ்மி உள்ளிட்ட சில நிறுவனங்களும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் சாம்சங் நிறுவனம் 17.2%, பங்களிப்பையும்,ஷாவ்மி 16.6%பங்களிப்பையும் கொண்டுள்ளது.ஆப்பிள் நிறுவன போன்கள் 6%பங்களிப்பை தருகிறது. உலகளவில் ஒப்புக்கொள்ளப்படாத நுட்பங்களை ஏற்கக்கூடாது என்று இந்திய செலுலார் மற்றும் எலக்ட்ரானிக் அசோசியேஷன் என்ற அமைப்பு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.