ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் முடக்கம் ! – 52 ஆயிரம் கோடியை இழந்த மார்க் ஜுக்கர்பெர்க் !
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்ஆப் ஆகிய மூன்று தளங்களின் சேவைகளும் திங்களன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தடைபட்டது. குறிப்பாக இரவு ஐந்து மணிநேரத்துக்கும் மேலாக சேவையில் பாதிப்பு இருந்ததால் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டது.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்ஆப் முடங்கியதற்கு, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் பயனர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக மார்க் ஜுக்கர்பெர்க் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது,
“ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் மற்றும் மெசஞ்சர் ஆகியவை இப்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன. இன்று ஏற்பட்ட இடையூறுக்கு மன்னிக்கவும். உங்கள் மீது அக்கறைக் கொண்டவர்களுடன் தொடர்பில் இருக்க எங்கள் சேவைகளை நீங்கள் எவ்வளவு நம்பியிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்”
இணையதள செயலிழப்பு பற்றிய அறிக்கைகளைக் கண்காணிக்கும் தளமான டவுண்டிடெக்டர் (Downdetector), இந்த ஃபேஸ்புக் சேவை செயலிழப்பு இதுவரை கண்டிராத அளவிற்கு மிகப்பெரியது என்று கூறியுள்ளது. டவுண்டிடெக்டர் நிறுவனம் வெளியிட்ட ஒரு பதிவில், “உலகெங்கிலும் இருந்து 10.6 மில்லியனுக்கும் அதிகமான பிரச்சனை அறிக்கைகள் டவுண்டிடெக்டர் இல் பதிவு பதிவுசெய்யப்பட்டது. இது தான் நாங்கள் பார்த்த மிகப்பெரிய செயலிழப்பு.” என்று கூறியுள்ளது. கடைசியாக 2019 ஆம் ஆண்டில் பேஸ்புக் சேவை முடங்கியது. எனினும், இது ஒரு மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்தப் பாதிப்பின் விளைவாக மார்க் ஜுக்கர்பெர்க்கின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ஏறக்குறைய 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சரிந்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 52 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.
மார்க் ஜுக்கர்பெர்க் முன்பு ப்ளூம்பெர்க் இன் பில்லியனர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தார். அனால் தற்போது வெளியான ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, இந்த உலகளாவிய செயலிழப்பு காரணமாக ஃபேஸ்புக் பங்குகள் 5% சரிந்ததால், கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஜுக்கர்பெர்க் 5 வது இடத்திற்கு தள்ளப்பட்டார். மொத்த சொத்து மதிப்பு 121.6 பில்லியன் டாலர் கொண்ட ஜுக்கர்பெர்க், பில் கேட்ஸுக்கு அடுத்த இடத்தில் தற்போது உள்ளார்.
இருப்பினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மட்டும் நேற்று ஃபேஸ்புக்கின் சொத்து மதிப்பு சரிவடையவில்லை, அதன் பின்னணியில் வேறு ஒரு காரணமும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அது ஃபேஸ்புக்கின் ‘Civic Integrity Unit’-ல் பணிபுரிந்த முன்னாள் ஊழியரும் விசில் ப்ளோயருமான பிரான்செஸ் ஹவ்கென் என்பவர் சமீபத்தில் அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி என்று கூறப்படுகிறது.
அந்தப் பேட்டியில் பிரான்செஸ், “சில மோசமான விஷயங்கள் நீங்கள் நினைக்கும் அளவை விட ஃபேஸ்புக்கில் நடக்கின்றன. தங்கள் லாபத்துக்காக வெறுப்புணர்வைத் தூண்டும் பதிவுகள், போலிச் செய்திகள் போன்றவற்றை ஃபேஸ்புக் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது. இந்த நடைமுறை அதிகரித்து வருகிறது,” என்று கூறினார்.
ஃபேஸ்புக் இந்த விஷயங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது குறித்து சில ஆதாரங்களையும் பிரான்செஸ் சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். ஆனால் ஃபேஸ்புக் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. என்றாலும் அமெரிக்க அரசு இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.