தகிக்கும் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மட்டுமல்ல,தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்தை சந்திக்கும்போது இந்திய சந்தைகளும் ஆட்டம் காண்பது இயல்பான ஒன்று, அதே பாணியில்தான் தங்கத்தின் ஒரு அவுன்சின் சர்வதேச மதிப்பு 2 ஆயிரத்து 38 அமெரிக்க டாலர்களாக உள்ளது. இதன் விளைவாக தங்கத்தின் விலை சென்னையிலும் இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் தங்கம் வரலாற்றிலேயே இல்லாத வகையில் 5 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்தை நெருங்கி விற்பனை செய்யப்படுகிறது.அதாவது ஒரு சவரன் தங்கம் 45ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனையாகிறது.ஒரு கிராம் வெள்ளியின் விலையும் 1ரூபாய் 20 காசுகள் உயர்ந்து 83 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டிவெள்ளியின் விலையும் ஆயிரத்து 200 ரூபாய் அதிகரித்து 83ஆயிரம் ரூபாயாக நிலைபெற்றது. மேலே கூறிய விலை அறிவிப்பு அளவிலேயே இருக்கிறது. நிஜத்தில் செய்கூலி சேதாரம் உள்ளிட்டவற்றை சேர்க்கும்போது இன்னமும் கூட அதிகரிக்கும், அதாவது தற்போதைய தங்கம் விலையுடன் 3விழுக்காடு ஜிஎஸ்டி சேர்க்க வேண்டும். பின்னர் அதற்கு அடுத்தபடியாக நீங்கள் வாங்கும் தங்கத்தின் செய்கூலி, சேதாரத்தை கடைக்காரர்கள் நிர்ணயிக்கிறார். அது குறைந்தபட்சம் 8 விழுக்காடு இருந்தாலும் மொத்தமாக தங்கம் வாங்க விரும்பினால் ஒரு சவரன் 50 ஆயிரத்தை நெருங்கிவிடுகிறது. இதனால் நடுத்தர குடும்பத்தினர், தங்கம் வாங்கும் கனவு வெறும் கனவாகவே போய்விடுமோ என்று அஞ்சும் சூழல் உருவாகியுள்ளது.