ஃபால்குனி நாயரின் கனவும், நைக்காவின் வெற்றிக் கதையும் !
முதன்முறையாக அழகு சாதனப் பொருட்கள் துறை சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான நைகா, இந்திய பங்குசந்தையில் தனது ஐபிஓவை பட்டியலிட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே அதன் ஐபிஒ விலையை விடவும் 96 சதவீதம் நைகா வளர்ச்சி அடைந்துள்ளது. நைகா பிராண்டின் தாய் நிறுவனமான FSN இ-காமர்ஸ் நிறுவனத்தின் பங்குகளில் கிட்டத்தட்ட 50 சதவீத அளவில் வைத்துள்ளார் நைக்கா நிறுவனர் ஃபால்குனி நாயர் .
நைகா பட்டியலிடப்பட்ட பின்பு இவரிடம் இருக்கும் பங்குகளின் மொத்த மதிப்பு 7 பில்லியன் டாலர்கள் வரை உயர்ந்துள்ளது. இதன் மூலம் தனது சொந்த முயற்சியில் பில்லியனர் ஆன பெருமை ஃபால்குனி நாயரை சேரும். தனது ஐபிஓ வெளியீட்டின் பின்னர் செய்தியாளர்களிடம் ஃபால்குனி நாயர் கூறுகையில் “பெண்கள் தங்கள் மீது வெளிச்சம் படுவதற்கு அனுமதிக்க வேண்டும். என்னைப் போல் பல பெண்கள் கனவு காண வேண்டும்”என்று கூறினார்.
ஃபால்குனி நாயர் சரியான முறையில் திட்டமிட்டு இந்த நைகாவை இந்தியாவின் மிக முக்கியமான பிராண்டாக மாற்றியுள்ளார். 2012 வரை கோட்டக் மஹிந்திரா வங்கியின் தலைவராக இருந்த ஃபால்குனி, பின்பு தனது கனவை நிறைவேற்றுவதாக அதிலிருந்து வெளியேறினார்.”இந்திய பெண்களுக்கு அழகுபடுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் இருந்தாலும் அழகு சாதனப் பொருட்கள் கிடைப்பதில் பல தடைகள் இருந்தது, இதனால் ஆரம்பம் முதல் அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்வது மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் அவை கிடைக்கும் வகையில் செய்தோம்” என்கிறார். ஃபால்குனி தற்போது நைகா பிராண்டை பல பாலிவுட் நடிகைகள் மற்றும் பிரபலங்கள் உடன் இணைந்து பிரபலபடுத்தி வருகிறார்.
மார்ச் மாதம் முடிந்த நிதியாண்டில் 35% வளர்ச்சியுடன் 330 மில்லியன் டாலர்கள் விற்பனையை நைக்கா பதிவு செய்தது .நைக்கா நிறுவனத்தில் தனது பங்குகளை ஃபால்குனி நாயர் இரண்டு குடும்ப அறக்கட்டளை மற்றும் புரோமோட்டர் நிறுவனங்கள் மூலம் வைத்துள்ளார். மேலும் அவரது மகன் மற்றும் மகள் நைகா நிறுவனத்தை நிர்வகித்து வருகின்றனர். தற்போது மும்பை பங்குச் சந்தையின் FSN இ காமர்ஸ் சந்தையில், அதன் ஐபிஒ 96 சதவீதம் உயர்ந்து 2213 ரூபாயாக வர்த்தகமாகிறது.