4-ல் ஒருத்தர் வேலை போயிடும் என அச்சம் !!!
கந்தர் என்ற வணிக நிறுவனம் இந்தியர்களுக்கு வேலை எவ்வளவு முக்கியம், எவ்வளவு பேர் என்ன மனநிலையில் உள்ளனர் என்று கணக்கெடுப்பு நடத்தியது. அதில் பல அதிர்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி,4-ல் 3 பேர் விலைவாசி உயர்வு குறித்து பரவலாக கவலைப்படுகின்றனர். 2023-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் உயரும் என்று பாதிக்கும் அதிகமானோர் நம்பிக்கையில் உள்ளனர். மேலும் 4-ல் ஒருவர் தனக்கு வேலை போய்விடும் என்ற அச்சத்தில் இருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. வரும் நிதிநிலை அறிக்கையில் வருமான வரி உச்சவரம்பு மாற்றி அமைக்கப்படும் என்று எதிர்பார்த்துள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. வேலை போய்விடும் என்ற அச்சத்தில் 36 வயது முதல் 55 வயதுள்ள 30% ஊழியர்கள் பயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3-ல் இரண்டு பங்குபேர் 80-சியில் வரிச்சலுகைகள் தரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட இந்த நிறுவனம் சென்னை, மும்பை,டெல்லி கொல்கத்தா, புனே, ஐதராபாத்,உள்ளிட்ட 12 நகரங்களில் ஆயிரத்து 892 பேரிடம் கருத்துகளை கேட்டு அறிக்கையாக அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா இன்னும் ஒழிந்துவிடவில்லை என்பதால் பலரும் தங்களுக்கு மருத்துவம் சார்ந்த செலவு அதிகரிக்கும் என்பதால் அதற்கு ஒரு பெரிய தொகையை எடுத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.