விவசாயிகளை அச்சுறுத்தும் உரத்தட்டுப்பாடு ! மோடி அரசின் இன்னொரு தோல்வி !
குளிர்கால பயிர் நடவுப் பருவத்தின் இயல்பு நிலையை சீர்குலைக்கும் விதமாக உரத்தட்டுப்பாடு ஒரு புதிய அச்சுறுத்தலாக உருவாகி இருக்கிறது, அடுத்த ஆண்டில் தொடர்ச்சியாக மிக முக்கியமான மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த விவகாரம் விவசாயிகளிடையே பதட்டத்தை உருவாக்கும் என்று தெரிகிறது.
மத்திய மற்றும் வட இந்தியாவின் விவசாயிகள் ஏற்கனவே ஒன்றிய அரசின் மீது நம்பிக்கையிழந்து காணப்படும் சூழலில் மானிய விலையில் உரங்களை விற்கும் அரசு விற்பனை நிலையங்களில் திரண்டிருப்பதும், பல இடங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பலாத்காரத்தைப் பிரயோகிக்கும் காவல்துறையுடன் அவர்கள் மோதலில் ஈடுபடுவதுமான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது அச்சத்தை உருவாக்கி இருக்கிறது.
சில மாநிலங்களில், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக அரசு அதிகாரிகள் காவல் நிலையங்களிலேயே உரப்பைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். பல நாட்கள் வரிசையில் அமர வேண்டியிருப்பதால் விரக்தியடைந்த விவசாயிகள், உரங்களை வழங்கக் கோரி உள்ளிருப்பு போராட்டங்களை நடத்தியுள்ளனர். டீ-அம்மோனியம் பாஸ்பேட் (டிஏபி) போன்ற அடிப்படை ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ள உரைவகைகளுக்குப் பெருமளவில் தட்டுப்பாடு நிலவுகிறது, இது ராபி எனப்படும் குளிர்கால நடவுப் பருவத்தில் விதைக்கப்பட்ட கோதுமை, கடுகு மற்றும் பிற பயிர்களுக்கு தேவைப்படும் மிக முக்கியமான உரைவகையாகும்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள விவசாயியான யோக்ராஜ் சிங் கூறுகையில், “ஆயிரக்கணக்கான மக்கள் டி.ஏ.பி உரத்துக்காகக் காத்திருக்கும் போது ஒன்று அல்லது இரண்டு லாரிகள் மட்டுமே வருகின்றன. எனக்கு குறைந்தது ஏழு பைகள் உரம் தேவைப்படுகிறது, ஆனால் பல நாட்கள் முயற்சித்த பிறகு இதுவரை மூன்று பைகள் மட்டுமே எனக்கு கிடைத்திருக்கிறது” என்கிறார் அதிகாலை முதலாக உரத்திற்கான வரிசையில் நிற்க முயற்சித்து உரம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி இருக்கும் யோக்ராஜ் சிங்.
பாரதீய ஜனதா ஆட்சியில் இருக்கும் உத்திரப்பிரதேசம், காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பெருமளவிலான வாக்காளர்கள் விவசாயிகள், 2022 ஆம் ஆண்டின் துவக்கத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களைக் கணக்கில் கொண்டால் உரத்தட்டுப்பாடு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள், இந்த மாநிலங்களில் பெரும்பான்மையான மக்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விவசாயத்தை சார்ந்து வாழ்வது குறிப்பிடத்தக்கது.
சந்தை சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் மூன்று புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் லட்சக்கணக்கான விவசாயிகளின் போராட்டங்களைத் தீர்க்க முடியாமல் கடந்த ஒரு வருடமாக பாரதீய ஜனதா அரசு போராடி வருகிறது. இந்த சட்டங்களில் உள்ள சீர்திருத்தங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்து வருகிறார்கள்.
மோடி அரசு உரத்தட்டுப்பாடு இல்லை என்று மறுக்கிறது, “பதுக்கல்காரர்கள் ஏற்படுத்தும் வதந்திகள் தான் இதற்கு காரணம், மாநிலங்களின் உரத்தேவை நவம்பர் மாதத்தில் பூர்த்தி செய்யப்பட்டு விடும்” என்கிறார் ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா. இதுபோன்ற வதந்திகளைப் பயன்படுத்தி உரங்களை கல்லாகி சந்தையில் விற்பனை செய்ய முயற்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் எச்சரிக்கிறார்.
உலகளாவிய அளவில் உரங்களின் விலை அதிகரிப்பு, பெருந்தொற்றுக் காரணமாக மூலப்பொருட்களின் உற்பத்திக் குறைவு மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடைகள் போன்ற காரணிகள் இந்த நெருக்கடிக்கு காரணமாக இருப்பது ஒரு புறம் என்றாலும், சரியான நேரத்தில் இறக்குமதிக்கான ஆர்டர்களை செய்வதில் மோடி அரசு வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாக விமர்சகர்கள் கண்டனம் செய்திருப்பது கவனிக்கத்தக்கது. இந்தியா உள்நாட்டுப் பயன்பாட்டிற்கான உரங்களில் மூன்றில் ஒரு பகுதியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது.
“இது ஒரு நிர்வாக பிரச்சினை” என்று இந்திய விவசாயிகள் சங்கமான “பாரத் கிரிஷாக் சமாஜ்” தலைவர் அஜய் வீர் ஜாகர் கூறுகிறார். “மானிய தொகை உயர்ந்திருக்கிறது, ஆனால், அந்த அளவுக்கு கூடுதல் பணத்தை ஒதுக்கீடு செய்வது குறித்து அரசு முடிவு செய்ய முடியாததால் குழப்பம் நிலவுகிறது” என்கிறார் அஜய்வீர் ஜாகர். உரங்களை நேரடியாக விவசாயிகளுக்கு சந்தை விலைக்குக் குறைவாக விற்கும் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்குவதன் மூலம் அரசாங்கம் மானியங்களை நடைமுறைப்படுத்துகிறது. கடந்த மாதத்தில் மட்டும் அரசு டிஏபி உரத்துக்கு 57.16 பில்லியன் கூடுதல் மானியத்தை அறிவித்திருக்கிறது.