விவசாய பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் ஆலோசனை..
இந்தியாவில் அடுத்த மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி பட்ஜெட்டுக்கு முன்பு விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார். கால நிலை மாற்றம் மற்றும் அதற்கு தேவையான மாற்று ஏற்பாடுகள் குறித்து விவசாய விஞ்ஞானிகளும், விவசாயம் சார்ந்த பொருளாதார நிபுணர்களும் ஆலோசனைகளை முன்வைத்தனர். பூச்சிமருந்துகளுக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டியும், தண்ணீர் பம்புகளுக்கு தற்போது 12 விழுக்காடு ஜிஎஸ்டியும் இருக்கிறது. இதனை குறைப்பத பற்றி பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 19 ஆம் தேதி நடந்த முதல் கூட்டத்தில் பொருளாதார நிபுணர்களிடமும், 20 ஆம் தேதி நடந்த இரண்டாவது கூட்டத்தில் நிதி மற்றும் சந்தை முதலீட்டாளர்களிடமும், அண்மையில் நடந்த 3 ஆவது கூட்டத்தில் சொத்து நிர்வாகம் மற்றும் உற்பத்தித்துறை பிரதிநிதிகளையும் நிர்மலா சீதாராமன் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். நடுத்தர மக்களின் வரிச்சுமையை குறைக்கும் வகையில் பட்ஜெட்டை தயாரிக்க நிதியமைச்சகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மொரார்ஜி தேசாயின் சாதனையை நிர்மலா சீதாராமன் உடைக்க இருக்கிறார். இதற்கு முன்பு மொரார்ஜி தேசாய் மட்டுமே தொடர்ந்து பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார். நிர்மலா சீதாராமன் தொடர்ந்து தாக்கல் செய்ய இருக்கும் 6 ஆவது பட்ஜெட் இதுவாகும்