ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தை வாங்கப்போவது யார்?
கலைக்கப்பட்ட ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தை வாங்க இந்தியாவின் ஷாம்ரோக் பார்மாகெமி மற்றும் இந்தியா ஜெலட்டின் அண்ட் கெமிக்கல்ஸ் ஆகியவற்றின் கூட்டமைப்பு, அமெரிக்காவை மையமாகக் கொண்ட பெர்ஃபெக்ட் டே மற்றும் பெல்ஜியம் நாட்டின் நிறுவனமான டெசென்டர்லோ கெமி இண்டர்நேஷனல் என்வி உள்பட ஐந்து நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. மற்ற இரண்டு நிறுவனங்கள் ஏசிஜி அசோசியேட்டெட் கேப்சூல்ஸ் மற்றும் ப்ரோக்கிசிவ் ஸ்டார் ஃபைனான்ஸ் ஆகும்.
ஸ்டெர்லிங் பயோடெக் 78 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வழங்கியவர்களுக்கு கடன்பட்டுள்ளது. உலகின் ஆறாவது பெரிய மருந்து ஜெலட்டின் உற்பத்தியாளராக ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தை 548.46 கோடி விலையில் விற்க இந்த ஆண்டு ஜூலை மாதம் ஏலம் கோரப்பட்டது. அப்போது அரபிந்தோ பார்மா, காடிலா ஹெல்த் கேர், யுபிஎல் உள்ளிட்ட பல இந்திய நிறுவனங்கள் ஆர்வம் காட்டின. இருப்பினும் நவம்பர் 3ந் தேதியன்று புதிதாக ஒரு ஷரத்து சேர்க்கப்பட்டபோது பெரும்பாலான உள்நாட்டு மருந்து நிறுவனங்கள் பின்வாங்கின.
இந்த 5 ஏலதாரர்களும் தகுதி அடிப்படையில் ஏலதாரர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். நிறுவனத்தின் ஏலம் ஜனவரி 10, 2022 அன்று தொடங்கப்படும். அன்றே வெற்றி பெற்றவர் அறிவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் குஜராத்தில் இரண்டு உற்பத்தி நிறுவனங்களையும், தமிழ்நாட்டில் ஒன்றையும் இயக்குகிறது. 2018 ஜூன் மாதம் 11ந் தேதியன்று ஆந்திரா வங்கி தாக்கல் செய்த ஒரு மனுவைத் தொடர்ந்து கார்ப்பரேட் திவால் தீர்மான செயல்முறை (CIRP)யின் கீழ், NCLT 2019ஆம் ஆண்டு மே மாதம் நிறுவனத்தைக் கலைக்க உத்தரவிடப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்க இயக்குனரகம் 9,700 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்தது. உரிமையாளர்களான சண்டேசராக்கள் ஆப்பிரிக்காவில் இருப்பதாக நம்பப்படுகிறது.