புதிய யுபிஐ செயலி வடிவமைக்கும் பிளிப்கார்ட்..
இந்திய நிறுவனமான பிலிப்கார்ட் சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க நிறுவனமான வால்மார்ட்டுக்கு தனது நிறுவனத்தை விற்றது. இந்த நிலையில் இந்தியாவில் பிளிப்கார்ட் நிறுவனம் அதே பெயரில் தொடர்ந்து இயங்கி வருகிறது. இந்த நிலையில் பிளிப்கார்ட் நிறுவனம் தனக்கென பிரத்யேக யுபிஐ செயலியை வடிவமைத்துள்ளது. இந்த செயலிக்கு சூப்பர்.மனி என்று பெயரிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 1 லட்சம் பேரிடம் இந்த செயலி பரிசோதிக்கப்படுகிறது. ஏற்கனவே வால்மார்ட்டுக்கு சொந்தமான போன்பே நிறுவன செயலி இருக்கும் நிலையில் தங்களுக்கு என பிரத்யேக யுபிஐ செயலியை பிளிப்கார்ட் வெளியிட இருக்கிறது. அட்டகாசமான கேஷ்பேக் உள்ளிட்ட சலுகைகளை சூப்பர் மணி அளிக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ஜிபே, போன்பே மற்றும் பேடிஎம் மட்டுமே பலரும் பயன்படுத்தும் நிலையில் 95 விழுக்காடு இந்த 3 நிறுவன செயலிகளே இருக்கின்றன. இந்த சூழலில் சிறிய நிதி நுட்ப நிறுவனங்கள் தங்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் பிளிப்கார்ட் நிறுவனம் ஒரு புதிய யுபிஐ செயலியை வடிவமைத்துள்ளது கவனம் பெற்றுள்ளது. இந்தியாவில் இதுபோல நூற்றுக்கணக்கான நிதி நுட்ப செயலிகள் இருந்தாலும், பிளிப்கார்ட் இந்தியர்களுக்கு நன்கு அறிமுகமான ஒரு பிராண்ட் என்பதால் சந்தையில் பெரிய ரவுண்டு வலம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.