ஜி.எஸ்.டி. சீர்திருத்தம்: ரூ.5 மற்றும் ரூ.10 பாக்கெட்டுகளில் மீண்டும் அதிக எடை
ஜி.எஸ்.டி. சீர்திருத்தம்: ரூ.5 மற்றும் ரூ.10 பாக்கெட்டுகளில் மீண்டும் அதிக எடை – எஃப்.எம்.சி.ஜி. நிறுவனங்களின் திட்டம்
அமெரிக்காவில் அதிக விலை உயர்வால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல எஃப்.எம்.சி.ஜி. (FMCG) நிறுவனங்கள் ஷ்ரிங்க்ஃப்ளேசன் எனப்படும் முறையை பின்பற்றின.
அதாவது, விலை அதேபடி இருந்தாலும் பாக்கெட்டின் எடை அல்லது அளவை குறைத்தனர். பாமாயில், காப்பி, கோகோ போன்ற மூலப்பொருட்கள் 100% வரை விலை உயர்ந்ததால் இந்த நிலை உருவானது.
ஆனால் இப்போது பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில் அறிவித்த ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் எஃப்.எம்.சி.ஜி. துறைக்கு நம்பிக்கை அளிக்கிறது.
மைய அரசு 12%, 18% சதவீத வரி நிலைகளை நீக்கி, 5%, 18% மட்டுமே வைக்க முனைவதாக கூறியுள்ளது. அன்றாட பயன்பாட்டு பெரும்பாலான பொருட்களுக்கு 5% சலுகை வழங்கப்படும்.
இதனால், பிஸ்கட், சிப்ஸ், நூடுல்ஸ், சாம்பு, தேநீர் போன்ற ரூ.5 மற்றும் ரூ.10 மதிப்புள்ள சிறிய பாக்கெட்டுகளின் எடை மீண்டும் அதிகரிக்கப்படும் என நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
விலை குறைக்க முடியாத சூழலில், அதிக எடை கொடுத்தே நுகர்வோருக்கு நன்மை வழங்கும் வழியைத் தேடுகின்றன. உதாரணமாக, பிரிட்டானியா நிறுவனம் தனது விற்பனையின் 62% ரூ.5–10 பாக்கெட்டுகளில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.டி. குறைவதால் இதன் பயன் நேரடியாக கிராமப்புறம் வரை செல்லும் என நிறுவன மேலாளர் வருண் பெர்ரி கூறினார்.
கிரெமிகா ஃபுட்ஸ் போன்ற நிறுவனங்களும், “எடை குறைக்க வேண்டியிருந்த பாக்கெட்டுகளில் அதை மீண்டும் கூட்டி தருவோம்” எனத் தெரிவித்துள்ளன. பெரிய பாக்கெட்டுகளின் விலைகளையும் புதிய வரி நிலைக்கு ஏற்ப குறைப்பதற்குத் தயாராக உள்ளன.
விநியோகஸ்தர்கள், புதிய ஜி.எஸ்.டி. அமலானதும் புது பாக்கெட்டுகள் விரைவில் சந்தையில் வரும் என எதிர்பார்க்கிறார்கள். நெஸ்லே, ஐ.டி.சி., டாடா நுகர்வோர், இந்துஸ்தான் யூனிலீவர் போன்ற நிறுவனங்கள் முன்னிலைப் பெறும் முயற்சியில் உள்ளன.
நோமுரா, ஜெஃப்பெரிஸ் போன்ற பங்கு பரிந்துரையாளர் நிறுவனங்களும், இந்த சீர்திருத்தம் அன்றாட அத்தியாவசிய பொருட்களில் தேவையை அதிகரித்து, நுகர்வோர் சந்தைக்கு புதிய ஊக்கத்தைத் தரும் என மதிப்பிட்டுள்ளன.
நீல்சன்ஐக்யூ தரவின்படி, ஏற்கனவே ஜூன் காலாண்டில் எஃப்.எம்.சி.ஜி. விற்பனை 6% வளர்ச்சி கண்டுள்ளது.
