மாரிகோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பேட்டி
மாரிகோ நிறுவனத்தின் உணவு வணிகம், எண்ணெய் வணிகத்தை மிஞ்சும்: நிர்வாக இயக்குநர் பேட்டி
மாரிகோ நிறுவனத்தின் உணவு வணிகம் அடுத்த 3-4 ஆண்டுகளில் அதன் சமையல் எண்ணெய் வணிகத்தை விட பெரியதாக வளர வாய்ப்புள்ளது என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், தலைமை செயல் அதிகாரி சௌகதா குப்தா தெரிவித்துள்ளார்.
ஆரோக்கியமான உணவுப் பிரிவில் ‘சாஃபோலா’ பிராண்ட் மூலம் இந்நிறுவனம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
2024-25 நிதியாண்டில், மாரிகோவின் உணவு வணிகம் ₹900 கோடியைத் தாண்டியுள்ளது. இந்த வளர்ச்சி, சாஃபோலா ஓட்ஸ், தேன், பல்வேறு தின்பண்டங்கள் போன்ற புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் சாத்தியமானது.
மாரிகோ நிறுவனம் சாஃபோலா ஓட்ஸ், மசாலா ஓட்ஸ் தயாரிப்புகளின் விநியோகத்தையும், சந்தை பரவலையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
மேலும், சாஃபோலா தேன் மற்றும் மியூஸ்லி பிரிவுகளிலும் வலுவான இருப்பை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம், மாரிகோ தனது உணவுப் பிரிவில் 25% வளர்ச்சியை அடைய முடியும் என்று குப்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2024-25 நிதியாண்டில், மாரிகோவின் மொத்த வருவாய் ₹10,000 கோடியைத் தாண்டியுள்ளது.
இந்தியாவில் இருந்து மட்டும் அதன் வருவாய் ₹7,581 கோடியாக இருந்தது. உணவுப் பிரிவு உள்நாட்டு வருவாயில் 11% பங்களித்தது. அதே நேரத்தில், சமையல் எண்ணெய் வணிகம் 19% பங்களிப்பை அளித்துள்ளது.
மாரிகோ நிறுவனம் 2030-க்குள் ₹20,000 கோடி வருவாயை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடைய, உள்நாட்டு வணிகம் 13% கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் வளர வேண்டும் என்று குப்தா தெரிவித்தார்.
நிறுவனம் புதிய தொழிற்சாலைகள், தானியங்கி அமைப்புகளில் முதலீடு செய்து வருகிறது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களை முடிவெடுக்கும் செயல்பாடுகளில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, செலவுகள், லாப வரம்பு அழுத்தம் இருந்தபோதிலும், மாரிகோ தனது விளம்பரச் செலவுகளைக் குறைக்கவில்லை.
டிஜிட்டல் விளம்பரங்கள் மற்றும் பிராண்ட் ஈக்விட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விளம்பரங்களில் தொடர்ந்து முதலீடு செய்யப் போவதாகவும் குப்தா தெரிவித்தார்.
