உணவுத்துறை பணவீக்கத்தால் சிக்கல்..
இந்திய பொருளாதாரத்தில் உணவு பணவீக்கம் மிகப்பெரிய பங்கு வகிப்பதாக ரிசர்வ் வங்கி தனது ஆண்டறிக்கையில் கூறியுள்ளது. நாட்டின் மொத்த பணவீக்கத்தில் 60.3 விழுக்காடு பங்களிப்பை உணவுத்துறை பூர்த்தி செய்வதாக அந்த அறிக்கை கூறுகிறது. இந்த அளவு கடந்த 2023-ல் 40%ஆக இருந்தது. 4 விழுக்காடு என்ற ரிசர்வ் வங்கியின் பணவீக்க இலக்கை எட்ட முடியாமல் தவிக்க வைப்பது உணவு பணவீக்கம்தான் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. தற்போது வரை உணவு பணவீக்கம் காரணமாக 1.3 விழுக்காடு குறைந்து இந்திய பொருளாதாரம் 5.4விழுக்காடாக இருக்கிறது. காலநிலை மாற்றம் காரணமாக உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு அது பிரதான பணவீக்கத்தை அதிகரிப்பதாகவும் ரிசர்வ் வங்க கூறுகிறது. குறிப்பாக தென்மாநிலங்களில் நீர்நிலைகளில் போதிய தண்ணீர் இல்லாத சூழல் காணப்படுகிறது. இதனாலும், உலகளாவிய பதட்டமான சூழல் காரணமாகவும் பணவீக்கம் உயரும் நிலை உள்ளது. கடந்த மாத தரவுகளின் படி சில்லறை பணவீக்கம் என்பது 4.83 விழுக்காடாக குறைந்திருக்கிறது. மார்ச் மாதத்தில் உணவு பணவீக்கம் 8.52 விழுக்காடாக இருந்த நிலையில் ஏப்ரலில் 8.7 விழுக்காடாக அது உயர்ந்திருக்கிறது. 2024-ல் உலகளாவிய பணவீக்கம் 4-5 முதல் 5.9 %ஆக இருக்கலாம் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. படிப்படியாக பணவீக்கம் குறைந்து வருவதை ரூமுக்குள் யானை வரும் தருவாய் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் வர்ணித்துள்ளார். அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையேற்றம்,அதிகரித்து வரும் வெயில் மற்றும் செங்கடல் பிரச்சனைக்கு மத்தியிலும் இந்தியாவின் பணவீக்கம் 4.5%ஆக இருக்கலாம் என்று சக்தி காந்ததாஸ் கடந்த நிதி கொள்கை கூட்டத்தில் கணித்துள்ளார்.