இந்தியாவை விட்டு வெளியேறும் ஃபோர்டு மோட்டார்ஸ்! என்ன காரணம்?
இந்தியாவில் கார் உற்பத்தியை நிறுத்தப் போவதாக வெளியாகி இருக்கும் ஃபோர்டு மோட்டார்சின் அறிவிப்பு தொழில் துறையில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
அதன் சனந்த் (குஜராத்) ஆலை உற்பத்தியை 2021 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிலும், சென்னை (தமிழ்நாடு) ஆலை உற்பத்தியை 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிலும் நிறுத்திவிடும் என்று ஃபோர்ட் சமீபத்தில் ஒரு செய்தியை வெளியிட்டது. நிறுவனத்தின் நீண்டகால ஊழியர்கள் உட்பட பலர் இதைப் படித்து அதிர்ச்சியடைந்தனர். ஃபோர்டின் இந்த முடிவு அதன் டீலர்களையும் அங்கு பணியாற்றும் ஊழியர்களையும் பாதிக்கும்.
வெற்றிகரமான ஃபோர்டு மோட்டார்ஸின் பிராண்டான “ஐகான்” 1999 இல் தயாரிக்கப்பட்டு வெளியானது, அதைத் தொடர்ந்து ஃபோர்டு குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி வசதிகளின் மூலம் 12 தயாரிப்புகளை வழங்கியது. பின்னர் அவர்கள் ஃபோர்ட் மாண்டியோவை அறிமுகப்படுத்தினார், ஆனால் அதன் அதிக விலை காரணமாக அது நாளடைவில் மறைந்தது. பின்னர் பியூசன் வந்தது, ஆனால் அதுவும் ஐகான் போல பெரிய வெற்றி பெறவில்லை.
ஃபோர்டுக்கு என்ன நடந்தது?
பிராண்டின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜிம் பார்லி கூறுகையில், “கடந்த பத்தாண்டுகளில் ஃபோர்டு $2 பில்லியன் டாலர்கள் நஷ்டத்தை சந்தித்தது. இயங்கும் வசதிகளுக்கு ஏற்படும் அதிக செலவு மற்றும் தேவைக் குறைபாடு போன்றவை நிலைமையை மேலும் மோசமாக்கியது.” இந்த முடிவுக்கு வருவதற்கு முன் கூட்டாண்மை, பிளாட்பார்ம் பகிர்வு மற்றும் அதன் உற்பத்தி யூனிட்களை விற்பது போன்ற பலவற்றை நிறுவனம் அலசியது என்று அறியப்படுகிறது.
பல வருடங்களாக நிறுவனம் சந்தித்த நஷ்டங்கள், தேவைக்கதிகமான துறைத்திறன் மற்றும் இந்தியாவின் கார் சந்தையில் எதிர்பார்த்த வளர்ச்சி இல்லாததால் இந்த முடிவு வலுப்படுத்தப்பட்டது, என்கிறார் ஃபோர்டு இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனுராக் மெஹ்ரோத்ரா.
இதனால் வாடிக்கையாளர்களுக்கு என்ன ஆகும்?
ஃபோர்டு ஸ்பேர் பார்ட்ஸ் மற்றும் சேவைகளைத் தொடர்ந்து வழங்குவதால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. வரவிருக்கும் முஸ்டாங் மேக்-இ, ஃபோர்டு ரேஞ்சர் மற்றும் முஸ்டாங் போன்ற உயர்நிலை மாடல்களையும் ஃபோர்டு தொடர்ந்து இறக்குமதி செய்யும் என்று தெரிகிறது.
ஃபோர்ட் 23 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கலில் உள்ளது, ஆனால் அதன் கதை இன்னும் முடிவடையவில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.