சென்னைக்கு வருமா ஃபோர்டு..
அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்டு, சென்னை அருகே மறைமலை நகரில் உள்ள அதன் ஆலையை மீண்டும் செயல்படுத்தும் திட்டத்தை மறுபரிசீலனை செய்வதாக கூறப்படுகிறது.
மிச்சிகனை தளமாகக் கொண்ட இந்நிறுவனத்தின் உயர் நிர்வாகிகள், இந்த தொழிற்சாலையின் எதிர்காலம் குறித்து விவாதிக்க ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2022இன் நடுப்பகுதியில் இருந்து இந்த தொழிற்சாலை செயல்படாமல் மூடப்பட்டுள்ளது. இதை மீண்டும் இயக்க திட்டமிட்டு வந்த நிலையில், இந்திய பொருட்கள் மீது அமெரிக்க டிரம்ப் 50% இறக்குமதி வரி விதித்துள்ளது, இதன் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.
”டிரம்ப் விதித்துள்ள இறக்குமதி வரிகளினால், இந்த தொழிற்சாலையை மீண்டும் செயல்படுத்தி, அமெரிக்காவிற்கு கார்களை ஏற்றுமதி செய்வதில் சிக்கல் அதிகரித்துள்ளது. எனவே இத்திட்டத்தை மறு மதிப்பீடு செய்ய வைத்துள்ளது,” என்று இதுபற்றி அறிந்த நபர் ஒருவர் கூறியுள்ளார்.
அதே சமயத்தில் ஐரோப்பிய கண்டம் முழுவதும் பல நூறு கோடி டாலர் அளவிலான புதிய முதலீடுகளை ஃபோர்டு முன்னெடுத்துள்ளது. இதில் ஜெர்மனியின் கொலோனில் மின்சார வாகன உற்பத்தியில் ₹ 440 கோடி முதலீடு, இங்கிலாந்தில் உதிரி பாகங்கள் உற்பத்தி மையம், பேட்டரி தொழில்நுட்ப ஆராய்ச்சி ஆகியவை அடங்கும்.
இந்நிலையில், மறைமலை நகர் தொழிற்சாலையின் எதிர்காலம் குறித்து கூடுதல் தகவல்களை உரிய நேரத்தில் வேளியிடுவோம் என ஃபோர்டு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
சென்னையில் அமைந்துள்ள, 12,000 பேர் கொண்ட ஃபோர்டு வணிக சேவைகள் மையம் தொடர்ந்து இயங்கி வருவதை சுட்டிகாட்டினார். “நாங்கள் தமிழக அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். அவர்கள் அளித்து வரும் ஆதரவை பாராட்டுகிறோம்” என்றும் கூறினார்
