வெளியேறும் முதலீட்டாளர்கள்.. காரணம் என்னனு தெரியுமா..!?
அந்நிய முதலீட்டாளர்கள் மார்ச் மாதத்தில் அதிக அளவில் இந்திய பங்குச் சந்தையிலிருந்து பணத்தை திரும்ப பெற்றுள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், கொரோனாவல் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பணவீக்கமும் உயர்ந்துள்ளது.
இந்நிலையில், அந்நிய நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையிலிருந்து தங்களுடைய முதலீடுகளை திரும்ப பெற்றுள்ளனர். தொடர்ந்து 6-வது மாதமாக, அந்நிய முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்து முதலீட்டை திரும்ப பெற்றுள்ளனர்.
அதன்படி, மார்ச் மாதத்தில் மட்டும் அந்நிய முதலீட்டாளர்கள்(FPO) 41 ஆயிரத்து 123 கோடி ரூபாய் முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர்.
இதேபோல் கடந்த ஜனவரியில் ரூ.33 ஆயிரத்து 303 கோடி முதலீடும், பிப்ரவரி மாதத்தில் 35 ஆயிரத்து 592 கோடி ரூபாய் முதலீட்டையும் அந்நிய முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுள்னர்.
இந்த ஆண்டைப் பொறுத்தவரை மார்ச் மாதத்தில் தான் அதிக அளவில் அந்நிய முதலீடு திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும், 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ரூ.1.48 லட்சம் கோடி அந்நிய முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதங்கள் மாற்றப் பட்டது, உக்ரைன் ரஷ்யா போர், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவைகளால் அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையிலிருந்து முதலீட்டை திரும்ப பெற்று வருகின்றனர் என அப்சைட்அல் என்ற தரகு நிறுவனத்தின் நிறுவனர் அட்டானு அகர்வால் தெரிவித்துள்ளார்.
இனிவரும் மாதங்களிலும் இவ்வாறு அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளியேறுவது தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார்.