பார்ட்டனரை தேடும் பாக்ஸ்கான் நிறுவனம்..
செமி கண்டக்டர் உற்பத்தியில் சிறப்பாக செயல்பட்டு வரும் பெரிய நிறுவனங்களில் ஒன்றாக தைவானின் பாக்ஸ்கான் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவில் அண்மையில் வேதாந்தா குழுமத்துடன் இணைந்து சிப் உற்பத்தியில் ஈடுபட இருப்பதாக அறிவித்தது. ஆனால் கடைசி நேரத்தில் வேதாந்தா நிறுவனம் இந்த கூட்டணியில் இருந்து விலகிவிட்டது. இதனால் செமிகண்டக்டர் உற்பத்தி தொடங்கும் திட்டம் காலதாமதமாகிறது. இந்த நிலையில் பாக்ஸ்கானின் தலைமை செயல் அதிகாரியான யங் லியூ அண்மையில் இந்தியாவுக்கு வந்தார். அவர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முதலீடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பாக்ஸ்கான் நிறுவனம் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடுவெறும் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே. கூட்டு நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டு பாதியில் அந்த ஒப்பந்ததில் இருந்து வெளியேறினாலும் பாக்ஸ்கான் நிறுவனம் தங்களின் சிறந்த நண்பர் என்று வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். வேதாந்தா குழுமம் விலகியுள்ள நிலையில் டெக் பார்ட்னரை பாக்ஸ்கான் தேடி வருவதாக யங் லியூ கூறியுள்ளார்.அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் புதிய பார்ட்னர் குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் யங் லியூ கூறியுள்ளார். கூட்டு நிறுவனம்தான் சாத்தியமில்லாமல் போனதே தவிர்த்து மற்ற உதவிகளை நண்பனுக்காக செய்யத் தயாராக இருப்பதாக வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். மேட் இன் இந்தியா திட்டத்தில் அடுத்த இரண்டரை ஆண்டுகளில் இந்தியாவிலேயே செமி கண்டக்டர் உற்பத்தி செய்யப்படும் என்றும் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். வேதாந்தா குழுமம் மட்டுமே 5 பில்லியன் டாலர் அளவுக்கு செமிகண்டக்டர் உற்பத்தியை செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடன்கள் அதிகம் உள்ள நிலையில், பங்குச்சந்தையில் பலரும் வேதாந்தா பங்குகளில் முதலீடு செய்ய இருப்பதாக அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். எனவே சௌகர்யமான நிலையில் வேதாந்தா குழுமம் இருப்பதாகவும் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.