தமிழ்நாட்டில் 1,600 கோடி முதலீடு செய்யும் பாக்ஸ்கான்…
செமிகண்டக்டர்கள், செல்போன், கணினி உதிரி பாகங்களை உற்பத்தி செய்வதில் கிங்காக திகழ்கிறது தைவானைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம். இந்த நிறுவனத்தின் இன்டஸ்ட்ரியல் இன்டர்நெட் என்ற பிரிவு தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்ய புதிய ஆலை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 6,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த புதிய ஆலை அமைய இருக்கிறது.ஏற்கனவே பாக்ஸ்கான் நிறுவனம் சென்னைக்கு அருகே ஒரு ஆலையை நிர்வகித்து வருகிறது. இந்த ஆலையில் 35,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
2024 இறுதிக்குள் புதிய ஆலை கட்டுமானம் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செமிகண்டக்டர் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு இந்தியாவில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள நிலையில் உலகளவில் பிரபல நிறுவனங்களில் ஒன்றான பாக்ஸ்கான் சென்னை அருகே ஆலையை நிறுவ இருக்கிறது.
அண்மையில் நடந்த செமிகான் மாநாட்டில் அமெரிக்காவின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான AMD 400மில்லயின் அமெரிக்க டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்தது. இந்த ஆலை பெங்களூருவில் செயல்பட இருக்கிறது.இந்த ஆலையின் மூலம் 2028ஆம் ஆண்டிற்குள் 3,000 புதிய பொறியியல் சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளது. மோடி கடந்த மாதம் அமெரிக்கா சென்றபோது இந்தியாவில் 850 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாக மைக்ரான் நிறுவனம் தெரிவித்திருந்தது.லாம் ரிசர்ச் என்ற நிறுவனம் இந்தியர்கள் 60,000 பேருக்கு புதிய நுட்பங்களை கற்றுத்தர 400மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.