friend or Enemy?? குழப்பும் trump..
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தப் போவதாக, பிரதமர் நரேந்திர மோடி தனக்கு உறுதியளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று தெரிவித்தார்.
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடர்பாக இந்தியா – அமெரிக்க உறவுகள் மோசமடைந்த பின், ஆகஸ்ட்டில் இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 25%ல் இருந்து 50%ஆக டிரம்ப் உயர்த்தியிருந்தார்.
“இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் நான் வருத்தம் அடைந்தேன். இந்நிலையில் இனி ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று மோடி எனக்கு உறுதியளித்தார்” என வெள்ளை மாளிகை நிகழ்வின் போது டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். ”இந்தியா உடனடியாக இறக்குமதிகளை நிறுத்த முடியாது என்றும், அதை படிப்படியாக செயல்படுத்துவார்கள்” என்றும் டிரம்ப் மேலும் கூறினார்.
டிரம்ப் இந்தியாவிற்கு அனுப்பிய புதிய அமெரிக்க தூதரான செர்ஜியோ கோர் மோடியை டெல்லியில் சந்தித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இருவரும் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பப் பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.
டிரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஆரம்ப கட்ட வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை சுமார் 1% உயர்ந்தது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 57 செண்ட் ,அதாவது 0.9% உயர்ந்து, 0046 GMT நிலவரப்படி, ஒரு பீப்பாய்க்கு $62.48 ஆக உயர்ந்தது. அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் இடைநிலை (WTI) கச்சா எண்ணெயின் எதிர்கால விலை 0.9%, அதாவது 54 செண்ட் அதிகரித்து $58.81 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது, ரஷ்யாவின் கடல்வழி கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் இந்தியாவும் சீனாவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பிப்ரவரி 2022 இல் உக்ரைன் மீதான படையெடுப்பிற்காக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும், ரஷ்யா மீது தடைகளை விதித்ததால், ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தின. இதன் விளைவாக தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ரஷ்யா தள்ளப்பட்டது. இதை சீனாவும், இந்தியாவும் பயன்படுத்துக் கொண்டன
