ஜி20:டிஜிட்டல் கரன்சி பற்றிய பேச்சை விட யூபிஐக்குத்தான் அதிக மவுசு!!!
ஜ20 நாடுகளின் கூட்டத்தை இந்தியா தலைமை ஏற்று நடத்தி வருகிறது. கல்வி, அறிவியல், வணிகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து 20 நாட்டுத் தலைவர்களும் தங்கள் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். இந்த வகையில் இந்தியாவில் வெற்றிகரமாக இயங்கி வரும் யுபிஐ வசதி 20 நாடுகளின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. பல நாடுகளும் டிஜிட்டல் கரன்சிகளை பற்றி பேசி வரும் நிலையில் இந்தியா வெளியிட்டுள்ள டிஜிட்டல் பண சேவையை விட யுபிஐக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற 20நாடுகளின் வணிக கூட்டத்தில் , நிதி அமைச்சர்கள், ரசிர்வ் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்கள் பங்கேற்றனர்.இதன்பின் பேசிய இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ரபி ஷங்கர், கிரிப்டோ கரன்சி உள்ளிட்ட டிஜிட்டல் பணம் பற்றி விவாதித்ததாக கூறினார். ஆனால் அதைவிட யுபிஐ வெற்றிகரமாக இயங்குவது பற்றித்தான் அதிகம் பேசப்பட்டது என்றார். பலநாடுகள் யுபிஐ போலவே தங்கள் நாட்டிலும் ஒரு முறையை கொண்டுவர விரும்புவதாகவும்,இந்தியர்கள் சுற்றுலாவுக்கு செல்லும் இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இது தொடர்பாக ஆலோசனை நடப்பதாக கூறினார். அண்மையில் யுபிஐ மற்றும் சிங்கப்பூரின் பே நவ் ஆகிய பரிவர்த்தனை முறைகள் இணைக்கப்பட்டு சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கும், இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கும் நொடிகளில் பணம் அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.