நெடுஞ்சாலை முகமைகளுக்கு கட்கரி எச்சரிக்கை
மோசமான சாலைகள் இருந்தால் தேசிய நெடுஞ்சாலை முகமைகள் சுங்கக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கேட்டுக் கொண்டுள்ளார். தரமற்ற, சேவைகள் இல்லாதபோது சுங்கக்கட்டணங்களை வசூலிக்க கூடாது என்றும் அவர் காட்டமாக கூறினார். செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கக் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தில் பேசிய அவர், இந்த நிதியாண்டில் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக கூறினார். தற்போது வரை ஃபாஸ்டேக் கட்டமைப்பின் மூலம் இந்தியாவில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
செயற்கைக்கோள் அடிப்படையிலான கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை முதலில் வணிக வாகனங்களில் சோதனை செய்யப்பட்டு பின்னர் அதனை தனிநபர் வாகனங்களிலும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. போலிகளை இதன் மூலம் எளிதாக தடுக்க முடியும் என்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் குறிப்பிடுகிறது. புதிய திட்டம் அமலுக்கு வந்தால் பிரீப்பெயிடுக்கு பதிலாக போஸ்ட் பெயிடு முறையில் பயன்படுத்தி முடித்த பிறகு பணம் செலுத்தினால் போதுமானதாகும்.
ஹைப்ரிட் திட்டம் மூலமாக 40 விழுக்காடு திட்ட மதிப்பை மத்திய அரசும், மீதமுள்ள தொகையை ஒப்பந்ததாரரும் அளிக்க இருக்கின்றனர். செயற்கைகக் கோள் மூலம் கட்டணம் வசூலிக்கும் திட்டம் அமலானால் அதில் 10 ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்க திட்டமிட்டுள்ளதாகவும் நிதின் கட்கரி கூறியுள்ளார். 2023-24 காலகட்டத்தில் மட்டும் இந்தியாவில் சுங்கக்கட்டணமாக 64,809 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டுகளை விட 35 விழுக்காடு அதிகமாகும். அதிகரித்து வரும் வணிக வாகனங்களின் பயன்பாடே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.