YES பேங்க் ஊழல் வழக்கு: ராணா கபூரைத் தொடர்ந்து, அவந்தா ரியாலிட்டி குழுமத்தின் கெளதம் தாப்பர் கைது!
YES – பேங்க் ஊழல் வழக்கில், செவ்வாய்க்கிழமை இரவு (04-08-2021) பணமோசடி தடுப்பு சட்டத்தின் (Prevention of Money Laundering Act) கீழ் அவந்தா குழுமத்தின் கெளதம் தாப்பர் கைது செய்யப்பட்டார், டெல்லி மற்றும் மும்பையின் 14 இடங்களில் நேற்று நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைகளின் முடிவில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மார்ச் 2020 இல், சிபிஐ பதிவு செய்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையின் (FIR) அடிப்படையில் அமலாக்கத்துறையானது, கெளதம் தாப்பரின் நிறுவனமான அவந்தா ரியாலிட்டி லிமிடெட் மற்றும் YES வங்கி இணை நிறுவனர் ராணா கபூர் மற்றும் அவரது மனைவி பிந்து ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சொத்துப் பரிவர்த்தனைகள் குறித்து விசாரிக்கத் தொடங்கியது.
கபூரும் அவரது மனைவியும், டெல்லியில் உள்ள “அம்ரிதா ஷெர்கில் மார்க்” எனும் 1.2 ஏக்கர் பரப்பளவுள்ள பங்களாவை அவந்தா ரியாலிட்டி லிமிடெட் நிறுவனத்திடமிருந்து, அதன் சந்தை மதிப்பிலிருந்து பாதி விலைக்கு வாங்கியதன் மூலம் ரூ.307 கோடி பணத்தை சட்டவிரோதமாகப் பெற்றதாக மத்திய நிறுவனமான அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு பிரதிபலனாக, YES வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூர், அவரது ரியாலிட்டி நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட ரூ.1900 கோடி மதிப்புள்ள வங்கிக் கடன்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். தாப்பர் புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார், பின்னர் அமலாக்கத்துறை இவரை விசாரிப்பதற்காக தங்கள் வசம் ஒப்படைக்கக் கோரலாம். இதே போல மற்றொரு சிபிஐ வழக்கில் கெளதம் தப்பார் YES வங்கிக்கு ரூ.466.51 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ராணா கபூருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன?
30 மணிநேர விசாரணைக்குப் பிறகு, மார்ச் 8, 2020 அன்று அமலாக்கத்துறையால் ராணா கபூர் கைது செய்யப்பட்டார், தனது மகள்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் YES வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராணா கபூர் தவறாகப் பயன்படுத்தினார் என்று அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. அவர் வங்கியின் தலைமைப் பொறுப்பில் இருந்தபோது ரூ.30,000 கோடி மதிப்புள்ள கடன்களை YES வங்கி வழங்கியதாகவும், பின்னர் ஏறத்தாழ முன்பணமாக வழங்கப்பட்ட ரூ.20,000 கோடி செயல்படாத சொத்தாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
லண்டனில் இருக்கும் ராணா கபூரின் 127 கோடி மதிப்புள்ள அடுக்கு மாடிக்குடியிருப்பை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கித் தன வசம் வைத்திருக்கிறது. ராணா கபூரின் குடும்ப உறுப்பினர்கள், இந்தப் பண மோசடியில் தொடர்புடையதாகக் கூறப்படும் 78 நிறுவனங்களோடு தொடர்பில் இருந்திருக்கிறார்கள் என்று அமலாக்கத்துறை கூறியது. மறுபுறம், YES வங்கிக்கு ராணா ஆற்றிய பங்களிப்புகளையும், அவர் பெற்ற விருதுகளையும் முன்வைத்து அவரது வழக்கறிஞர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், ராணா கபூரின் குடும்ப உறுப்பினர்கள் வாங்கிய கடன்கள் முறையாக திருப்பிச் செலுத்தப்பட்டதாகவும் அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
கோவிட்-19, பெருந்தொற்றுக்குப் பிறகு, ராணா கபூர் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். மூச்சுக்குழல் ஆஸ்துமா, நீண்ட கால நோய் எதிர்ப்பு குறைபாடு, கடுமையான உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம் இருப்பதால், சிறையில் அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டடது. மேலும், கபூர் வீட்டிலேயே தங்கி இருந்து வீட்டு உணவை சாப்பிட வேண்டும் என்று அவரது சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், இந்த மனு மற்றும் அடுத்தடுத்த அவரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதால் அவர் தொடர்ந்து சிறையில் இருக்கிறார்.