டைட்டன் நிறுவனத்தின் அட்டகாசமான வளர்ச்சி!!!
இந்திய அளவில் மிகப்பிரபலமான நிறுவனங்களில் ஒன்றாக டைட்டன் திகழ்கிறது.இந்த நிறுவனம் கடந்த காலாண்டில் மட்டும் 734 கோடி ரூபாய் நிகர லாபமாக பதிவு செய்துள்ளது.இது கடந்தாண்டைவிட 50விழுக்காடு அதிகமாகும்.கடந்தாண்டு இதே காலகட்டத்தில் இது வெறும் 491 கோடி ரூபாயாக இருந்தது. கிட்டத்தட்ட பாதி லாபம் அதிகரித்துள்ளதால் அந்த நிறுவனம் தங்கள் முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்குக்கு டிவிடண்டாக 10 ரூபாய் அளிக்க இருக்கிறது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் வருவாய் 7,276 கோடி ரூபாயாக இருந்தது. இது நடப்பாண்டு 33விழுக்காடு உயர்ந்து 9704 கோடிரூபாயாக அதிகரித்துள்ளது. ஜனவரி முதல் மார்ச்ச மாதம் வரை மட்டும் இந்திய வணிகம் 21விழுக்காடு உயர்ந்துள்ளது. இந்தியாவில் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகம் நடப்பதால் அது சார்ந்த நகைகள் டைட்டன் நிறுவனத்தில் அதிகம் விற்கப்பட்டுள்ளன.அதாவது 7576 கோடி ரூபாய் வருவாய் நகைகள் மூலம் மட்டும் வந்துள்ளன. வாட்ச்கள் மட்டும் 871 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன. அதில் 10 லட்சத்துக்கும் அதிகமான ஸ்மார்ட் வாட்சுகளை அந்நிறுவனம் விற்றுத்தள்ளியுள்ளது. மூக்குக்கண்ணாடி பிரிவின் வருவாய் மட்டும் 25விழுக்காடு உயர்ந்து 165 கோடி ரூபாயாக ஆண்டுக்கு ஆண்டு வருவாய் அதிகரித்துள்ளது. இந்திய ஆடைகள் விற்பனை குறிப்பிடத்தகுந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது.தேசிய பங்குச்சந்தையில் டைட்டன் நிறுவனத்தின் பங்குகள் விலை 2651 ரூபாய் என்ற அளவில் உள்ளது.