போச்சிடா.. போட்ட அத்தனையும் வீணாப்போச்சே…
அமெரிக்காவில் இரண்டு வங்கிகள் திவாலானதும் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் முதலீட்டாளர்களை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாகும் வகையில் ஒரு பெரிய சம்பவம் உலகில் நடந்துகொண்டிருக்கிறது. அது என்னவெனில் கிரெடிட் சூய்சி என்ற நிதி நிறுவனம் தங்கள் முதலீட்டாளர்களுக்கு கடன் பத்திரங்களை வழங்கியிருந்தது. ஒன்றல்ல இரண்டல்ல அமெரிக்க டாலர் மதிப்பில் 17 பில்லியன் டாலர் மதிப்புள்ள கடன் பத்திரங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருந்தது. இந்த நிலையில் கால் பங்கு அளவுக்கு சரிவை சந்தித்ததும் ஆட்டம் கண்ட கிரிடிட் சூய்சி நிறுவனத்துக்கு உதவி செய்ய அந்நாட்டு வங்கி முன்வந்தது. எனினும் அடிமாட்டு விலைக்கு கிரிடிட் சூய்சியின் பங்குகளை வாங்க யூபிஎஸ் நிறுவனம் முன்வந்தது. கிரிடிட் சூய்சி நிறுவனத்தை UBSநிறுவனம் வாங்கிவிட்டால், நிதி நிறுவனம் வழங்கிய கடன் பத்திரங்கள் ஒரே நாளில் வெற்று காகிதங்களாக மாறிவிடும். இந்த விவகாரத்தில் துரித நடவடிக்கை எடுக்க முதலீட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். AT1 வகை பத்திரங்களை கொண்டுள்ளவர்கள் மிகவும் கலங்க வைக்கும் இந்த சம்பவத்தால் யூபிஎஸ் வங்கி இன்னும் என்ன முடிவெடுப்பது என்று புரியாமல் உள்ளது. மிகவும் அபாயகரமான பத்திரங்களை வாங்கிவிட்டோமே என்று புலம்பும் முதலீட்டாளர்கள், இந்த விவகாரத்தை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல் குழம்பிப்போய் உள்ளனர். ஆனால் விவரம் தெரிந்தவர்கள் குறிப்பிட்ட இந்த வகை கடன் பத்திரங்கள் இதுபோன்ற இக்கட்டான சூழலுக்காகவே திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது என்றும், இப்போது வருத்தப்பட்டு ஒன்றும் மாறாது என்று வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுகின்றனர். இன்னும் யுபிஎஸ் நிறுவனம் கிரிடிட் சூய்சியை வாங்கியதாக அறிவித்துவிட்டால் 17 பில்லியன் டாலரும் பூஜ்ஜியம்தான் என்பதால் உலகளாவிய பங்குச்சந்தைகள், உலக வங்கிகளின் கட்டமைப்பு மேலும் திவாலாகும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.