தங்கப் பத்திரம் – 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.5,109-ஆக நிர்ணயம்..!!
2021-22-ஆம் ஆண்டுக்கான தங்க பத்திரத்தின் வெளியீட்டு விலை ஒரு கிராம் தங்கத்துக்கு ரூ.5,109 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 28-ம் தேதி முதல் மார்ச் 4-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் தங்கப் பத்திர விற்பனையில், 999 சுத்தமான தன்மையுடைய ஒருகிராம் தங்கப் பத்திரத்தின் விலை ரூ.5,109 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விலை பத்திர வெளியீட்டுக்கு முந்தைய 3 நாட்களுடைய சராசரி விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தங்கப் பத்திரங்களை வாங்குவதற்கு இணையவழி விண்ணப்பித்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவோருக்கு, கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி செய்து, ஒரு கிராம் தங்கப் பத்திரம் ரூ.5,059-ஆக விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இந்திய அரசின் சார்பாக ரிசர்வ் வங்கி பத்திரங்களை வெளியிடுகிறது. ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SHCIL), நியமிக்கப்பட்ட தபால் நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகள் — நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட் மற்றும் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் ஆகியவற்றின் மூலம் பத்திரங்கள் விற்கப்படும். சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும், மக்கள் நேரடியாக தங்கம் வாங்கும் பழக்கத்தை குறைப்பதற்காகவும், தங்கப் பத்திர விற்பனை திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதன்படி, கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் இறுதி வரையிலுமான காலகட்டத்தில், தங்கப் பத்திர விற்பனை வாயிலாக அரசு ரூ.25,702 கோடியை திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.