இருமடங்காகிய தங்க இறக்குமதி! ரூபாய் மதிப்பிற்கு அழுத்தம் ஏற்படுமா?
ஆகஸ்ட் மாதத்தில் தங்க இறக்குமதி ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகவும், கடந்த ஐந்து மாதங்களின் ஒப்பீட்டில் உச்ச அளவிலும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய விலைகளை ஒப்பிடும்போது தற்போது குறைந்திருப்பதும், தங்கத்தின் தேவை அதிகரித்திருப்பதும் தங்க நகை வர்த்தகர்களின் பண்டிகைக் காலத்துக்கான கொள்முதலை அதிகரிக்கத் தூண்டியதாக அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளது.
உலகின் தங்க நுகர்வு வரிசையில் இரண்டாம் இடத்தில உள்ள நமது இறக்குமதியின் உயர்வு, தற்போதய விலை அளவை ஆதரிப்பதாக இருக்கலாம். இப்போதைய விலை, ஆகஸ்ட் 2020ல் அடைந்த உச்ச மட்ட விலையான அமெரிக்க டாலர் 2,072 லிருந்து (அவுன்ஸ் ஒன்றுக்கு) கிட்டத்தட்ட 12% விலை திருத்தத்திற்குள்ளாகி குறைந்துள்ளது. இறக்குமதியின் அதிகரிப்பு இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையை அதிகரித்து ரூபாயின் மதிப்பு அழுத்தத்திற்குள்ளாகலாம்.
கடந்த வருட ஆகஸ்ட் மாதத்தின் இறக்குமதி தொகையை ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 300 கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு (கிட்டத்தட்ட ₹2.2 லட்சம் கோடிகள்) இந்த வருட ஆகஸ்ட் மாதத்தின் இறக்குமதி மதிப்பு அதிகரித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மாதத்தின் முதல் பாதியில் ஏற்பட்டதொரு விலை திருத்தம், வரவிருக்கும் பண்டிகை காலத்திற்கு தங்களது தங்க இருப்பை அதிகரித்துக்கொள்ள விரும்பிய தங்கநகை வர்த்தகர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை அளித்ததாக, மும்பை தங்க இறக்குமதி வங்கியை சார்ந்த வியாபாரி ஒருவர் கூறியதாக அறியப்படுகிறது.
ஒருவிதத்தில் தங்கத்திலான முதலீடு ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவசியமாயினும், மிகையான உயர்மதிப்பு பொருட்களின் இறக்குமதி, பெட்ரோலிய பொருட்களின் அத்யாவசிய இறக்குமதி ஆகியவை ரூபாய் மதிப்பை அழுத்தத்திற்குள்ளாக்கி விலைவாசியையும் மேலும் உயரச்செய்யலாம்.