2 வாரத்தில் இல்லாத வீழ்ச்சி கண்ட தங்கம் விலை..
உலகளவில் பெரிய ஆட்டம் போட்ட தங்கம் விலை கடந்த 23 ஆம் தேதி பெரிதாக வீழ்ச்சியை கண்டது. கடந்த 5 ஆம் தேதி முதல் இதுவரை தங்கம் விலை 0.3 விழுக்காடு வரை விலை குறைந்தது. கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி ஒரு அவுன்ஸ் தங்கம் 2431 டாலர்களாக இருந்தது. அது சமீப நாட்களாக அதன் உச்ச விலையில் இருந்து கீழே விழத் தொடங்கியிருக்கிறது. தங்கம் விலை சரிய முக்கிய காரணிகள் என்ன என்பதை பார்க்கலாம். இஸ்ரேல்-காசா இடையே நடந்து வந்த போர் ஓரளவு தணிந்துள்ளதும், இஸ்ரேலிய படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய போர்ப்பதற்றம் தணிந்ததும் சர்வதேச அளவில் தங்கம் மீதான விலை உயர்வு கட்டுப்பட முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இது மட்டுமின்றி அமெரிக்க டாலரின் மதிப்பு கணிசமாக உயர்ந்து வருவதும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் பணவீக்கம், மற்றும் வேலைவாய்ப்பு தரவுகளும், அமெரிக்க பெடரல் ரிசர்வ் கடன்கள் மீதான வட்டியை குறைக்காததும் முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் அரசியல் நிலைத்தன்மை, பிரிட்டன் பவுண்டு-அமெரிக்க டாலர் இடையேயான பரிவர்த்தனை விகிதம் மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ்வின் அதிக வட்டி விகிதம் ஆகிய முக்கிய காரணிகள் அமெரிக்கா மட்டுமின்றி சர்வதேச அளவில் தங்கத்தின் விலையை தீர்மாணிக்கிறது. ஜப்பானிய யென் மற்றும் அமெரக்க டாலர் இடையேயான பரிமாற்ற அளவும், அமெரிக்க டாலருக்கு நிகரான ஜப்பானிய யென் மதிப்பு குறைந்து வருவதும் தங்கத்தின் மீதான மதிப்பை குறைத்திருக்கின்றன. மத்திய கிழக்கு நாடுகளில் சண்டை ஓய்ந்துவிடும் பட்சத்தில் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பிருப்பதாகவே நிபுணர்கள் கணிக்கின்றனர்.