எதிர்ப்பு எழுந்ததால் கடைசி நேரத்தில் நிறுத்திய கர்நாடக அரசு..
கர்நாடக அரசு அண்மையில் ஒரு வரைவு சட்டத்தை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய தீர்மானித்து அமைச்சரவையில் இறுதி முடிவும் எடுக்கப்பட்டது. அது என்னவெனில், கர்நாடகத்தில் தனியார் நிறுவனங்களிலும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 100 விழுக்காடு கன்னடர்களுக்கே வேலை அளிக்க வேண்டும் என்பதே அந்த சட்ட முன்வடிவம். மிகப்பெரிய டெக் நிறுவனங்களான கூகுள், இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பெங்களூவில் இருந்துதான் இயங்கி வருகின்றன. 245 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட டெக் துறையாக பெங்களூருவில் உள்ள டெக் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் பெரும்பாலான டெக் பணியாளர்கள் வெளிமாநிலத்தவர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் மண்ணின் மைந்தர்களான கன்னடர்களுக்குத்தான் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்று புதிய சட்டம் இயற்றப்பட முடிவு செய்யப்பட்டது. இதற்கு பல தரப்பினர் இடையே கடும் கண்டனங்கள் எழுந்தன. அதன்படி 50 விழுக்காடு இட ஒதுக்கீடு நிர்வாகத்தில் கன்னடர்களுக்கும், 75 விழுக்காடு அளவுக்கு நிர்வாகம் அல்லாத பணியில் கன்னடர்களுக்கும் அளிக்க காங்கிரஸ் அரசாங்கம் திட்டம் தீட்டியது. அப்படி இருக்கையில் யாருக்கெல்லாம் இந்த புதிய சட்டத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கலாம். கர்நாடகத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும், 15 ஆண்டுகள் மாநிலத்தில் வசித்திருக்க வேண்டும், கன்னடத்தில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்ற சட்டத்தில் அம்சங்கள் இடம்பிடித்திருக்கின்றன. இந்நிலையில் தொழிற்சாலைகளை மூடும் நிலைக்கு புதிய சட்டம் பாதகத்தை ஏற்படுத்தும் என்று தொழிலதிபர்கள் கருத்து தெரிவித்தனர். இது சட்டவிரோதமானது என்றும், அரசியலமைப்புச்சட்டத்துக்கு எதிரானது என்றும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டெக் பணியாளர்கள் தரப்பில் இருந்தும் இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனால் புதிய சட்ட முன்வடிவத்தை கிடப்பில் வைப்பதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.