டெக் பணியாளர்களுக்கு ஓர் நற்செய்தி
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க பெடரல் ரிசர்வ்வங்கி கடன்கள் மீதான வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இந்த சூழலில் அமெரிக்காவில் பல டெக் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்தும், புதிதாக பணியாளர்களை எடுக்காமலும் தவிர்த்து வந்தனர். இந்த நிலையில் அமெரிக்காவில் கடந்த மாதம் எவ்வளவு பேரை புதிதாக வேலைக்கு சேர்த்தார்கள் என்ற புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 2 லட்சத்து 53 ஆயிரம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.அந்த நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் அளவு 54 ஆண்டுகளில் இல்லாத வகையில் 3.4%ஆக இருக்கிறது. ஆனால் பிப்ரவரி மாதத்தில் இருந்த பாதிப்பைவிட ஏப்ரலில் கடுமையாக குறைந்திருப்பதாகவும் அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. ஓரளவுக்கு நிலைமை கட்டுக்குள் வர ஆரம்பித்துள்ளதால் டெக் நிறுவனங்கள் உள்ளிட்ட அமெரிக்க வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.அதிகரிக்கும் விலைவாசி, ஊழியர்களின் சம்பளம் ஆகியவை அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தையை சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளதாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒருபக்கம் ஆறுதலான எண்ணிக்கை தரவுகள் வெளியாகி வந்தாலும்,ஆட்குறைப்பு மற்றும் பொருளாதார மந்தநிலை இந்தாண்டு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் மணி நேரக்கணக்கில் சம்பளம் அளிக்கும் விகிதம் மார்ச் மாதத்தில் அரை விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளதும் அந்த நாட்டு பணவீக்க தரவுகளில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 2022 முதல் 10 முறை பெடரல் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதால் அமெரிக்காவில் தொழில்துறை முற்றிலும் முடங்கியிருக்கிறது என்றே சொல்லலாம். இது அந்நாட்டு பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. இதற்கு அந்த நாட்டு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். டெக் பணியாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து, வேலைவாய்ப்பு மற்றும் பணவீக்கம் அளவு கட்டுக்குள் வரும்வரை நிலைமை இப்படித்தான் இருக்கும் என்றும் அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.