அமெரிக்காவில் நற்செய்தி..
கடந்த ஏப்ரல் மாதத்துக்கான பணவீக்கம் குறைவான அளவிலேயே உயர்ந்திருப்பதாக அந்நாட்டு அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் தொழிலாளர் பிரிவு தகவல்கள் மே 15 ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதில் வாடிக்கையாளர் பணவீக்க குறியீடு கடந்த 12 மாதங்களாக 3.4 %ஆக இருப்பதாகவும், மார்ச் மாதத்தில் 3.5 விழுக்காடாகவும் இருந்துள்ளது.
கடந்த ஜூன் 2022-ல் இதே வாடிக்கையாளர் பணவீக்கம் 9.1 %ஆக இருந்தது. ஜனவரி 2024-க்கு பிறகு முதல் முறையாக வாடிக்கையாளர் பணவீக்கம் குறைந்திருக்கிறது. மீண்டும் அமெரிக்க பணவீக்கம் சரிவை நோக்கி செல்கிறது. இது கடந்த 6 மாதங்களில் நடக்கும் முதல் நிகழ்வாகும். அமெரிக்காவில் தங்குவதற்கான சேவைகள் விலைவாசி 0.4 விழுக்காடு உயர்ந்துள்ளது. இது தொடர்ந்து 3 ஆவது மாதமாக நடக்கும் நிகழ்வாக உள்ளது. எரிபொருள் விலை 2.8%உயர்ந்துள்ளது. இந்த இரு பொருட்கள்தான் வாடிக்கையாளர் பணவீக்கம் உயர மிகமுக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி மோட்டார் வாகன காப்பீடு 1.8 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவில் சில்லறை விற்பனை பெரிய அளவில் மாற்றமில்லை என்றும் அமெரிக்க அரசு தகவல் வெளியாகியுள்ளது. பணவீக்க விகிதம் குறையும்பட்சத்தில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் தனது கடன்கள் மீதான வட்டி விகிதத்தை குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதத்துக்கான வாடிக்கையாளர் பணவீக்க தரவுகள் வரும் ஜூன் 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.