கைகள் நடுங்கின–கூகுள் முன்னாள் பணியாளர்..
பிரபல நிறுவனமான கூகுளின் ஒரு பிரிவினர் அண்மையில் வேலையைவிட்டு தூக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் எழுதியுள்ள பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பணத்தை மிச்சம் பிடிக்கும் நடவடிக்கையாக அண்மையில் கூகுள் நிறுவனம் பைத்தான் என்ற குழுவினரை கூண்டோடு வேலையைவிட்டு தூக்கியது. இதே பைத்தான் குழுவுக்கு அமெரிக்காவில் அதிக சம்பளம் தரவேண்டியுள்ளது. ஆனால் இன்னும் சில நாடுகளில் மிகக்குறைந்த விலையில் அந்த பணிகளை செய்ய ஆட்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கூகுளில் இருந்து நீக்கப்பட்ட பணியாளரான மாட் ஹூ, தனது லிங்க்டு இன் பக்கத்தில் தனது பணிநீக்கம் குறித்து பதிவிட்டுள்ளார். கூகுள் நிறுவனத்தில் 2 ஆண்டுகளாக மென்பொறியாளராக பணியாற்றிய தமக்கு பணிநீக்கம் குறித்த அறிவிப்பு வந்ததும் தம்மால் தாம் வழக்கமாக செய்து வந்த பணிகளின் உள்ளே நுழைய முடியவில்லை என்றும் கணினியை மீண்டும் பூட் செய்யவேண்டியதாக ஆயிற்று என்றும் தெரிவித்துள்ளார். சில நிமிடங்களில் அந்த ஈமெயிலும் வந்தது. இரவு 9 மணிக்கு தனது லேப்டாப்பில் உள்ள மெயிலை பார்த்த மாட்டுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
நீங்கள் வேலையில் இருந்து தூக்கப்படுகிறீர்கள் என்று வந்த அந்த மெயிலை பார்த்ததும், பதறிப்போய் சக ஊழியர்களிடமும் இதை தெரிவித்தார். அவர்களும் பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது. ஒட்டுமொத்த குழுவே தூக்கப்பட்டது அப்போதுதான் தெரிந்தது. மேனேஜருக்கும் வேலை போனதாக படிக்கும்போது தனது கைகள் நடுங்கியதாகவும் அவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.